சென்னை ; குளியலறையில் இளம்பெண் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்தவருக்கு 3 ஆண்டு சிறை !
2021 - ம் ஆண்டு இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.

இளம்பெண் குளிப்பதை மொபைல் போனில் படம் பிடித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை மணலியைச் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 2021 ஏப்ரல் 28ம் தேதி வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மோனிஷ் கவுதம் ( வயது 27 ) என்பவர், குளியலறை கதவின் ஓட்டை வழியாக மொபைல் போன் மூலம் பெண் குளிப்பதை படம் பிடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிடவே மோனிஷ் கவுதம் ஓட்டம் பிடித்து அவரது வீட்டிற்குள் பதுங்கி உள்ளார். இது குறித்து அப்பெண் தட்டிக்கேட்ட போது, மோனிஷ் கவுதம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அடுத்து, மணலி போலீசார் வழக்கு பதிந்து, மோனிஷ் கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மோனிஷ் கவுதமுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டு திருமணம் , மனைவியை காணவில்லை என இளைஞர் புகார்
சென்னை புளியந்தோப்பு ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு ஹரி ( வயது 20 ) கல்லுாரி மாணவர். இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த அனு ( வயது 19 ) என்பவருடன் சமூக வலை தளத்தில் பழகினார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். அனுவுக்கு அவரது வீட்டில் திருமணம் நிச்சயிப்பதாக கூறியதால், அவரை மதுரை வர வழைத்து கடந்த மாதம் 6 - ம் தேதி விஷ்ணுஹரி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து, சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த விபரம் அறிந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களுடன் சென்னை வந்து விஷ்ணுஹரி வீட்டாரிடம் பேசி, முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி மகளை ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு வாரங்கள் மொபைல் போனில் பேசி வந்த நிலையில், திடீரென அனுவின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் விஷ்ணு ஹரியை தொடர்பு கொண்டு, தன்னை ஒடிஷா மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக அனு தெரிவித்துள்ளார். இதையடுத்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் தன் மனைவியை மீட்டு தரக்கோரி விஷ்ணுஹரி புகார் அளித்துள்ளார்.
ஜாம்பஜார் பகுதியில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஜாம்பஜார் பகுதியில் போலீசார் மல்லன் பொன்னப்பன் தெருவில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
பின், அவரது உடைமைகளை சோதனை செய்த போது, 70 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் ( வயது ) 22 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 70 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.





















