விவாகரத்து கோரிய மனைவி ; கணவரை வீட்டை விட்டு வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து கோரிய மனைவியும், குழந்தைகளும் வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து கோரிய மனைவியும், குழந்தைகளும் வீட்டில் அமைதியாக வாழ வேண்டும் எனக் கூறி, கணவரை வீட்டை விட்டு வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபரான தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெண் வழக்கறிஞர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றக் கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவரும் ஒரே வீட்டில் இருந்து கொள்ளலாம் என்றும் கணவர் மனைவியை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்து, கணவரை வெளியேற்ற உத்தரவிடக் கோரி பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, ஒரே வீட்டில் இருக்கும்போது கணவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பெண் அச்சம் தெரிவிக்கும் போது, ஒரே வீட்டில் இருக்கலாம்; ஆனால் துன்புறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி, குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கணவர் இரு வாரங்களில் வெளியேற வேண்டும் என்றும், இல்லை என்றால் காவல்துறை உதவியோடு வெளியேற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மனைவி வேலைக்கு செல்வதை சகிக்க முடியாத கணவன், மனைவிக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும் எனும் போது அவரை நிரந்தர அச்சத்தில் வைத்திருக்க முடியாது எனவும் குடும்பத்தில் அமைதியை பேண கணவரை வெளியேறும்படி உத்தரவிடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்