வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்பவரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்வதும் போலி சான்றுகள் தயாரிக்கும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
![வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்பவரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் Madras High Court directed that action should be taken on criminals who cheat on the pretext of getting jobs and preparing fake certificates வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்பவரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/04a056baea018d04cf28026d0581407d1659766418_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்வதும் போலி சான்றுகள் தயாரிப்பதும் காளான் போல வளர்ந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இவற்றை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் படி இருந்து தப்பிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்துக்காக கடத்தப்பட்டு, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரம்யா மற்றும் பாபு ஆகியோரின் சட்டவிரோத காவலில் உள்ள தங்கள் வளர்ப்பு மகனை மீட்டுத் தரக் கோரி சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த டி சாந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ரம்யா, தங்கள் வளர்ப்பு மகனின் தத்தெடுத்த சகோதரி எனவும், பாபு வழக்கறிஞர் எனக் கூறிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு, போலி வழக்கறிஞர் என மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து பாபுவிடம் கேள்வி எழுப்பிய போது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்துள்ளதாக கூறி, சான்றிதழை தாக்கல் செய்தார்.
அந்த சான்றிதழில், தமிழில் வரலாறு பாடம் படித்து, சட்டத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளதாகவும், ஆங்கிலத்தில் சட்டத்தில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் தரப்பிலும், இது போலிச் சான்றிதழ் என விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த 1997 ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின், எந்த பல்கலைக்கழகமும் சட்டம் படித்ததற்கான பட்டங்களை வழங்க அதிகாரமில்லை எனும் போது, இந்த ஆவணங்கள் போலி என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த பாபுவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும், உதவி ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து, அவரது பள்ளிப்படிப்பு முதல் கல்வித் தகுதி குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பாபுவுக்கு எதிராக புகார் உள்ளதா என விசாரிக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் எனக் கூறும் பாபுவிடம் ஏமாந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விரிவாக விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டு விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளனர்
வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்வதும் போலி சான்றுகள் தயாரிப்பதும் காளான் போல வளர்ந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இவற்றை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் படி இருந்து தப்பிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)