Madras Eye: சென்னையை அச்சுறுத்தும் மெட்ராஸ் ஐ..! ஒரு வாரத்தில் 5 மடங்கு பாதிப்பு அதிகரிப்பு..! தப்பிப்பது எப்படி..?
இரண்டாம் நிலை நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஆண்டிபயாடிக்ஸ் வழங்கப்பட்டாலும், நோயாளிகள் தனிமைப்படுத்தப்படவும், போதுமான ஓய்வு எடுக்கவுமே வலியுறுத்தப்படுவார்கள்.
கண் வெண்படல அழற்சி என்று அழைக்கப்படும் 'மெட்ராஸ் ஐ’ தொற்று கான்ஜுன்க்டிவிடிஸ்/ கண்சவ்வில் ஏற்படும் பிரச்னையாகும். பொதுவாக மழைக்காலத்தில் சென்னையில் பரவலாக இந்தத் தொற்று ஏற்படுகிறது.
5 மடங்கு பாதிப்பு :
குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மத்தியில் மெட்ராஸ் ஐ தொற்று வேகமாகப் பரவும் சூழலில், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்னதாக எச்ச்சரித்துள்ளனர்.
சென்னையில் பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள், காலனிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் மெட்ராஸ் ஐ நோய்த்தொற்றுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்த பாதிப்பு :
எழும்பூரில் உள்ள மண்டல கண் மருத்துவக் கழகத்துக்கு நவம்பர் முதல் வாரத்தில் வந்த நோயாளிகளின் என்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும். நாள் ஒன்றுக்கு 10 நோயாளிகள் வரும் இடத்தில் சுமார் 50 பேர் சிகிச்சைக்காக வந்துள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐஏஎன்எஸ் (IANS) உடனான உரையாடலில் இதுகுறித்துப் பேசியுள்ள மருத்துவர் எம். மனோஜ் நாயர், தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையிலும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து கண் மருத்துவமனைகளும் அதிக கண் வெண்படல அழற்சித் தொற்று நோயாளிகளை சந்துத்து வருகின்றன.
அறிகுறிகள் :
மெட்ராஸ் ஐ என்பது ஒரு பொதுவான தொற்று ஆகும், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டநபரின் கண்ணில் இருந்து வெளியேறும் திரவத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மெட்ராஸ் ஐ பரவுகிறது. இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது.
- மெட்ராஸ் ஐ தொற்றின் பொதுவான அறிகுறிகள்:
- கான்ஜுன்க்டிவிடிஸ் அரிப்பு உணர்வு.
- கண்கள் சிவத்தல்.
- கடுமையான எரிச்சலுடன் கண் சிவத்தல்.
- கண்ணின் வெள்ளைப் பகுதி, சிவப்பாக மாறுதல்
- வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுதல், கண்ணில் இருந்து அழுக்கு வெளியேற்றம்.
- கார்னியா பாதிப்பால் மங்கலான பார்வையும் ஏற்படலாம்.
- சில நோயாளிகளுக்கு கண் வீக்கம் ஏற்படும்.
மேலும், மெட்ராஸ் ஐ சிகிச்சைக்கு சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிருங்கள். உடனடியாக கண் மருத்துவர்களை அணுகுங்கள்.
இரண்டாம் நிலை நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு ஆண்டிபயாடிக்ஸ் வழங்கப்பட்டாலும், நோயாளிகள் தனிமைப்படுத்தப்படவும், போதுமான ஓய்வு எடுக்கவுமே வலியுறுத்தப்படுவார்கள்.
தவிர்க்க வேண்டியது :
இந்தத் தொற்று கண் பார்வையை பாதிக்காது. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரையின்றி கடையில் கிடைக்கும் கண் சொட்டு மருந்துகள் அல்லது லூப்ரிகண்ட்களைப் பயன்படுத்த வேண்டாம்.
கண்களைத் தொடுவதால் இந்த வைரஸ் தொற்று பரவும் நிலையில், நோய்த்தொற்று ஏற்படும் போது கண்ணைத் தேய்ப்பதையோ அல்லது தொடுவதையோ தவிர்க்க வேண்டும்.
அதிகப்படியான திரவம் கண்களில் இருந்து வெளியேற்றப்பட்டால், கண்ணை சுத்தம் செய்ய டிஸ்யூக்கள் பயன்படுத்துங்கள்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும்” என மருத்துவர் மனோஜ் தெரிவிக்கிறார்.