Madras Day 2022 : பெத்தவங்கள மறக்கலாம்.. வளர்த்தவங்கள? சென்னைக்கு இன்று 383 வது பிறந்தநாள்! எங்கு என்ன நிகழ்ச்சிகள்?
தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாளாக கோலாகலமாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது.
சென்னை தினம் உருவானது எப்படி..?
சமீப காலமாக சென்னையின் பெருமையைக் கொண்டாட 'மெட்ராஸ் டே’ கொண்டாடப்படுகிறது. நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டும் ஆகஸ்ட் 22 ஐ எதிர்பார்த்து பல்வேறு கொண்டாட்டங்கள் தயாராகி வருகின்றன. நம்ம சென்னை, வணக்கம் சென்னை என ஹேஷ்டேகுகளுக்கும் பஞ்சமிருக்காது.
நாம் இன்று போற்றும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் சிறிய கிராமம். பசுமையான ஓர் அழகிய கிராமம். கூவம் அழகிய நதி. கிழக்கிந்திய கம்பெனி சென்னையை வாங்கியபிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது. ஏராளமான நிறுவனங்கள், ஷாப்பிங் இடங்கள் என மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.
1688-ம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் மாநகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். சென்னைதான் நாட்டின் முதல் மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் வரலாற்று ஆச்சர்யம்:
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில், எத்தனையோ பிரிவுகள், சாதி, மதம் என அனைத்தும் இருக்கிறது. எவ்வளவு குழப்பங்கள, சலனங்கள், சதிகள் வந்தாலும், வந்த வேகத்தில் சுனாமி போல் சென்றுவிடுமே தவிர, இங்கேயே தங்கியிருந்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதில்லை என்பதுதான் பொதுவான வரலாறு. விதிவிலக்குகள் உண்டு. ஆனால், அவை விதிகளாக மாறிவிடாது.
இது இன்று நேற்றல்ல... ஆண்டாண்டு காலமாக, சென்னையில் பெரிய அளவு சாதிச் சண்டைகளோ, மதச் சண்டைகளோ வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை. ஏன் தெரியுமா... சென்னை மாநகரமே, ஒரே குலம், ஒரே இனம், ஒரே மதம் என்றவகையில், பிழைக்கத் தெரிந்தவன் பிழைப்பான், மற்றவனும் வாழ்வான் மற்றவரின் தயவில் என்றவகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. எனவே, சென்னை எப்போதுமே, அங்கு வாழ்பவர்களுக்கு பெஸ்ட் ப்ளேஸ், இன்னும் சொல்லப்போனால், செல்லப்பிள்ளை என்று சொல்வதில் எள்ளளவும் தவறில்லை.
சென்னை தினத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரம் நடக்க இருக்கும் நிகழ்வுகள் :
ஆகஸ்ட் 22 (திங்கள்): திலீப் குமார்: கதைகளுக்கான சைன்போர்டுகள், ஒரு பயணம். நீதிபதி பிரபா ஸ்ரீதேவனுடன் எழுத்தாளர் திலீப் குமார் உரையாடல் இடம்: அஷ்விதாஸ், மயிலாப்பூர்
மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை: தமிழ்வழிப் பள்ளி மாணவர்களுக்கான தமிழில் சென்னை வினாடி வினா இடம்: ரானடே நூலகம், மயிலாப்பூர்.
ஆகஸ்ட் 23 (செவ்வாய்கிழமை): வரலாற்றாசிரியர் மற்றும் மெட்ராஸ் மியூஸிங்ஸ் ஆசிரியர் ஸ்ரீராம் வி, முன்னோடி சமூக சேவகர் பூனம் நடராஜனுடன் உரையாடல் இடம்: பாசிபிலிடீஸ் மியூசியம், டிரிப்ளிகேன்.
மாலை 5 மணி: பேச்சு மற்றும் விளக்கக்காட்சி: "மாமல்லபுரம் - வெறும் செஸ் மட்டும் அல்ல" என்ற தலைப்பில். இடம்: பிரஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, தரமணி.
ஆகஸ்ட் 24 (புதன்கிழமை): மானுவல் ஆரோனுடன் டெட் எ டெட்: செஸ் ஜாம்பவான் மேனுவல் ஆரோனுடன் கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் ராமன் உரையாடல் இடம்: ஹோட்டல் மார்ஸ், கதீட்ரல் ரோடு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை: காதுகேளாத கலைஞர்களின் படைப்புகளின் கண்காட்சி. இடம்: பாசிபிலிடீஸ் மியூசியம், மெரினா கடற்கரைக்கு அருகில்.
ஆகஸ்ட் 25 (வியாழன்): மதராஸிலிருந்து சமையல் குறிப்புகள்: மெட்ராஸ் நகரத்தின் ஒருங்கிணைந்த சமூகங்களின் தாக்கங்களைக் கண்டறிதல். ராகேஷ் ரகுநாதன் பேசும் இடம்: ஹனு ரெட்டி குடியிருப்பு.
மாலை 6.45 முதல் 7.45 வரை: மெரினாவின் பாரம்பரியம் குறித்த பேச்சு. இடம்: ஆர்கே கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.
ஆகஸ்ட் 26 (வெள்ளிக்கிழமை): மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை - கல்கியின் பொன்னியின் செல்வன் மேடையேற்றம்: கலைஞரும் இயக்குனருமான பிரவின் கண்ணனூர் பேச்சு இடம்: ஹோட்டல் சவேரா, மயிலாப்பூர்.
மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை: தமிழ் சினிமா இசையில் ஆக்டிவிசம்: திரைப்பட தயாரிப்பாளர் கே ஹரிஹரன் மற்றும் இசை தயாரிப்பாளர் சுபஸ்ரீ தணிகாசலம் தொகுத்து வழங்கும் நேரடி இசை நிகழ்ச்சி இடம்: கோதே இன்ஸ்டிட்யூட் ஆடிட்டோரியம், மேக்ஸ் முல்லர் பவன், ரட்லாண்ட் கேட்.
ஆகஸ்ட் 27 (சனிக்கிழமை): மாலை 4 முதல் 6 மணி வரை – டிஜிட்டல் சென்னை: டிஜிட்டல் அலையில் சென்னை நிறுவனங்கள் எப்படி சவாரி செய்கின்றன. விகாஸ் சாவ்லா (இணை நிறுவனர், சோஷியல் பீட்) மற்றும் ஜெகதீஷ் குமார் (இணை நிறுவனர், வேளி) ஆகியோரைக் கொண்ட குழு விவாதம்.
6.30 முதல் 8 மணி வரை: நேச்சர் வாக் - ஷோர் வாக் எலியட்ஸ் பீச். இடம்: கார்ல் ஷ்மிட் நினைவுச்சின்னம்.