Madras Day 2022: சென்னையில இருந்தா மிஸ் பண்ணிடாதீங்க! சுற்றிப் பார்க்க சிறந்த 20 இடங்கள்!
Madras Day 2022: சென்னை தினத்தையொட்டி, சென்னையில் கட்டாயம் பார்க்க கூடிய சிறந்த 20 இடங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்
தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தை தவிர்த்து, பிற மாவட்டங்களில் வாழும் பலருக்கும் சென்னை செல்ல வேண்டும் என்பதே கனவாக இருக்கும். பல மாணவர்களுக்கும், சென்னை சென்று படிக்க வேண்டும் என்றும், வேலை பார்க்க நினைப்போர்க்கு சென்னை வேலை பார்க்க வேண்டும் எனவும் ஆசை இருக்கும். ஏனென்றால், சென்னையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இருப்பர். ஆனால் சென்னையில் மட்டும் தான் அனைத்து மாவட்ட மக்களும், அனைத்து சாதி, மதத்தவரும் கலந்துபேதமின்றி இருக்கின்றனர். அப்படிப்பட்ட சென்னையில், கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களையும், சென்னைவாசிகளே பலரும் பார்க்காத சில் இடங்களையும் தெரிந்து கொள்வோம்.
1.மெரினா கடற்கரை:
உலகிலேயே 2வது நீளமான கடற்கரையான மெரினா, சென்னையில் அமைந்து உள்ளது நமக்கு அதிர்ஷ்டமே. வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்துள்ள இக்கடற்கரையானது, சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கடற்கரைக்கு, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து, தங்கள் மனதை இளைப்பாறி விட்டுச் செல்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை மாவட்டத்திற்கு வருவோரும், மெரினா கடற்கரைக்கு சென்று விட வேண்டும் என ஆவலோடு வருகின்றனர். எத்தனை முறை சென்றாலும் சலிக்காத இடமாகவும், புதுமையாக பார்ப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
2.கிண்டி நேஷனல் பூங்கா:
சென்னை பெருமாநகராட்சிக்குள்ளே அமைந்துள்ள அரிய வகை தேசிய பூங்கா-தான் கிண்டி தேசிய பூங்கா. இப்பூங்காவில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள், பல வகையான பாம்பு இனங்கள், பல்வேறு பாலூட்டிகள், நூற்றுக்கு மேற்பட்ட பறவை இனங்கள், பல வகையான வண்ணத்துப் பூச்சிகள், பல்வேறு வகையான தாவர வகைகள் உள்ளிட்டவைகள் உள்ளன. குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு மிகச் சிறந்த இடம். குறிப்பாக, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும்.
3.சென்னை அரசு அருங்காட்சியகம்:
அரசு அருங்காட்சியகம், சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ளது. 1851-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அருங்காட்சியகம் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 6 கட்டடங்கள் அமைந்துள்ளன. இக்காட்சியகத்தில் சிற்பங்கள், விலங்குகள், ஓவியங்கள், நாணயங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்ட பலவகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
4.கன்னிமாரா நூலகம்:
கன்னிமாரா நூலகம், 1860 ஆம் ஆண்டு ஜீன் மிட்செல் என்ற ஆங்கிலேயரால், அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவைகளின் ஒரு பிரதி, இங்கு பெறப்படுகிறது. இந்நூலகத்தில் பழமையான மற்றும் புகழ்பெற்ற புத்தகங்கள் இருக்கின்றன.
5.அண்ணா நூற்றாண்டு நூலகம்:
கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமானது, 8 தளங்களை கொண்டுள்ளது. இங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்நூலகமானது உலக இணைய மின் நூலகத்துடனும், யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.
6.புனித ஜார்ஜ் கோட்டை:
1639-40 ஆண்டுகளில், ஆங்கிலேயர் பிரான்சிஸ் டே என்பவர் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டினார். இக்கோட்டைதான், தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலமாகவும், சட்டப்பேரவை அலுவலகமாகவும் மற்றும அமைச்சர்களின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கோட்டையில் புனித மேரி கிறிஸ்தவ ஆலயம், கிளைவ் மாளிகை மற்றும் கோட்டை அருங்காட்சியகம் ஆகிய மூன்று கட்டடங்கள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போது, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் உள்ள அருங்காட்சியகத்துக்குள் சென்று, வரலாற்றை சற்று புரட்டிவிட்டு வாருங்கள்.
7.வள்ளுவர் கோட்டம்:
திருவள்ளுவரின் நினைவாக கட்டப்பட்ட நினைவகம்-தான் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம். இங்கு பிரசித்தி பெற்ற திருவாரூர் கோயில் தேர் மாதிரியில், 128 அடிக்கு சிற்ப தேர் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேரில் திருவள்ளுவர் சிலை 9 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சுமார் 4 ஆயிரம் பேர் இருக்க கூடிய அரங்கம் உள்ளது. அரங்கத்தினுள் 1,330 குறள்கள் கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் குறள்கள் ஓவியங்களாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இக்கட்டடங்களை சுற்றி மரங்களும், பூச்செடிகளும் நம்மை அன்புடன் வரவேற்கின்றன.
8.பிர்லா கோளரங்கம்:
கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், விண்வெளி அறிவியலை புகுத்தும் இடமாக உள்ளது. கோள்ரங்கமானது இரவில் விண்ணை பார்ப்பது போலவும், நிலா மற்றும் கோள்களை அருகில் இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும். மாணவர்கள் கோள்கள் குறித்து படிக்கும் போது சிரமம் ஏற்பட்டால், கோளரங்கத்திற்கு சென்று வாருங்கள்.பின்னர், விருப்பத்துடன் கோள்கள் குறித்து படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
9.பிரம்மஞான சபை:
பிரம்மஞான சபை, சென்னையில் உள்ள அடையாறில் உள்ளது. இங்கு பல வகையான பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளது. இங்கு 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது.
10.பார்த்தசாரதி கோயில்:
வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளது. இக்கோயிலை 8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் ராஜா முதலாம் நரசிம்மவர்மன் கட்டினார். இக்கோயில் திருமாலின் அவதாரங்களான நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய ஐந்து உள்ளன. இக்கோயிலில் தென்னிந்திய கட்டடக் கலையை வலியுறுத்தும் விதமாக பல சிற்பங்கள் காணப்படுகின்றன.
11.மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்:
சைவ தலங்களில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் குறித்து தேவாரப் பாடல்களில், ஏழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சம்பந்தர் பாடியுள்ளார். இதன் மூலம், இக்கோயில் 7-ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என அறிய முடிகிறது. பின் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போர்ச்சுக்கீசியர், இக்கோயிலை அழித்தனர். பின்னர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது.
12.ஆயிரம் விளக்கு மசூதி:
தமிழ்நாடு சியா முஸ்லிம்களின் தலைமையிடமாக விளங்கும் ஆயிரம் விளக்கு மசூதி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இம்மசூதி, 1810 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு, முன்பு இருந்த சபை மண்டத்தை ஒளிரச் செய்ய ஆயிரம் விளக்கு ஏற்றும் இடமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இம்மசூதிக்கு ஆயிரம் விளக்கு மசூதி பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
13.சென்னை சாந்தோம் ஆலயம்:
16-ஆம் நூற்றாண்டில், சென்னை மயிலாப்பூர் பகுதியில் போர்ச்சுக்கீசியரின், குடியிருப்புகள் அதிகமாகின. அதைத் தொடர்ந்து கி.பி. 1522 – 23 ஆம் ஆண்டில் சென்னையில் சாந்தோம் ஆலயத்தை கட்டினார். இன்றும், கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டு தலமாகவும், புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் இருப்பதை காணலாம்.
14.வடபழனி முருகன் கோயில்:
மக்களிடையே பிரபலமான கோயிலாக, வடபழனியில் உள்ள முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறுகின்றன. பழனியில் உள்ள முருகனை தரிசிக்க முடியாதவர்கள், வடபழனி முருகனை தரிசித்து செல்கின்றனர்.
15.பெசன்ட் நகர் கடற்கரை:
எலியட்ஸ் கடற்கரை என்று அழைக்கப்படுகிற பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரையின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், இக்கடற்கரைக்கு ஆங்கிலேயர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிய கடற்கரையாக இருந்தாலும், தூய்மையாகவும் மகிழ்ச்சி தரக்கூடிய இடமாக உள்ளது. இக்கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயிலும், வேளாங்கன்னி தேவாலயமும் உள்ளன. கடலை, கடற்கரையிலிருந்து பார்ப்பதே, ஆனந்தம் தானே...
16.செம்மொழி பூங்கா:
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நகரத்தின் மையத்தில், அமைதியாக, கண்ணுக்கு விருந்தாக தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது-தான் செம்மொழி பூங்கா. தாவர பூங்காவாக செயல்பட்டு வரும் பூங்காவில் பல்வேறு வகையான தாவர வகைகள், ஆயிரக்கணக்கான மக்களை தினமும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறது.
17.சென்னை ரயில் அருங்காட்சியகம்:
வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள ரயில் அருங்காட்சியமானது, ஆங்கிலேயர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த நீராவி இன்ஜின் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்கள் குறித்த தொழில்நுட்ப ரீதியாக தெரிந்து கொள்வோருக்கு சிறந்த இடம் என்றே சொல்லலாம்.
18.நேப்பியர் பாலம்:
நேப்பியர் பாலம், 1869-ஆம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இப்பாலம், மீண்டும் 1999-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இப்பாலமானது, இரவில் கூவம் நதியில் மிதப்பது போன்று ஒளி விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டையொட்டி, இப்பாலமானது வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களால் சதுர வடிவில் வண்ணம் தீட்டப்பட்டன.
19.காசி மேடு துறைமுகம்:
கடலில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் எப்படி விற்பனை செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ராயபுரத்தில் உள்ள காசிமேடு துறைமுகத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம். இங்கிருந்து பல மாநிலங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு சில்லரை விலையிலும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. காசிமேடு சென்று நேரடியாக மீன்கள் வாங்குவதால், நல்ல மீன்களை குறைந்த விலைக்கு வாங்கலாம்.
20.கோயம்பேடு:
கோயம்பேடு பேருந்து நிலையமானது, ஆசியாவில் 2வது மிகப் பெரிய பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு பேருந்து செல்கிறது. மேலும் கோயம்பேடு காய்கறிகள் சந்தையானது, மிகப் பெரிய வர்த்தக மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்று பார்க்கும் போது காய்கறிகள் எவ்வாறு வர்த்தகம் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னைக்கு புதிதாக வருபவர்கள், இந்த இடங்களை குறித்து கொண்டு, கண்டு மகிழுங்கள். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை காணாத சென்னையில் வசித்து கொண்டிருப்போரும் உடனே கண்டு களியுங்கள்.