தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?
kilambakkam bus stand protest சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்கு பேருந்து கிடைக்காததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
![தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ? kilambakkam new bus terminus due to non-availability of buses to various towns as the passengers blocked the road தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/85c5711deb69d77c944bf56b782f460b1707524126947113_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் பற்றாக்குறையால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். பேருந்துகள் இல்லாததால், கொசுக்கடியில் நடைமேடைகளில் படுத்து உறங்கி வரும் பயணிகள்.
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திரிசை தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடங்கியது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
முன் பதிவு
வார இறுதி நாள் என்பதால் சென்னையில் பணிபுரியும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் முன் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக மற்ற பயணிகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஏற்றவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லேசான தள்ளுமுள்ளு
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் தொடர்ந்து நீடித்து வந்ததால் கூடுவாஞ்சேரி சரக துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நடைமேடைகளில் படுத்து உறங்கி வருகின்றனர். வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் இந்த குழப்பம் நடைபெற்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
திடீர் கூட்டத்திற்கு காரணம் என்ன ?
நாளை ஞாயிற்றுக்கிழமை தை மாதத்தில் வரக்கூடிய, கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால், கிட்டத்தட்ட அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமணம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய வளர்பிறை முகூர்த்தம் என்பதால், அதிக அளவு திருமண நாளை நடைபெற உள்ளது. இந்த திருமணங்களில் கலந்து கொள்வதற்காக, பல்வேறு ஊர்களுக்கு நேற்று சென்னையில் இருந்து கிளம்பு துவங்கியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பதே பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாகவே நேற்று பழக்கத்தை விட அதிக பயணிகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே முகூர்த்த நாள் உள்ளிட்ட நாட்களை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் என்றாலும் இன்று இரவு அதைவிட, பொதுமக்கள் அதிகம் வந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து இது போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு கூட ஒரு முறை பேருந்து சிறைபிடிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. எனவே இது போன்ற சிக்கலுக்கு தீர்வு காண நிர்வாக ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் அணுக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)