காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தை....! சமயோஜிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த ஊழியர்கள்
’’காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மட்டுமின்றி முதியவர்களை குறிவைத்து நகைகளை நூதன முறையில் பறித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுவது வழக்க்கமாகி வருகிறது’’
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பிறந்து மூன்று நாட்கள் ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மகப்பேறு வளாகத்துக்குள் புகுந்து தம்பதியினர் திருடி சென்றுள்ளனர். ஏகப்பட்ட செக்யூரிட்டிகள் உள்ள நிலையில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு 750க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ள மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் சுமார் 63க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 140 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 28 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், 80க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 80 க்கும் மேற்பட்ட நிறுவன ஒப்பந்த சுகாதாரப் பணியாளர்கள் என சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்.மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்பு உண்டா என உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டுகோள். குழந்தையை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு pic.twitter.com/BaacG1vsun
— Kishore Ravi (@Kishoreamutha) March 12, 2022">
இந்நிலையில்,ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல் பழந்தை கிராமத்தை சேர்ந்த சுஜாதா பிரபாகரன் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர்களுக்கு கடந்த 8ஆம் தேதியன்று காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் சுஜாதாவும் அவருடைய அம்மாவும் பச்சிளம் குழந்தையை படுக்கையில் கிடத்திவிட்டு பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் கூறிவிட்டு கழிவறை சென்றுள்ளார்கள். திரும்பி வந்து பார்த்தபோது பச்சிளம் ஆண் குழந்தை காணாததைக் கண்டு துடித்தனர்.
மருத்துவமனை அலுவலர்களிடம் கூறியதை அடுத்து உடனடியாக அனைத்து கேட்களும் பூட்டப்பட்டு அலார்ட் செய்யப்பட்டது. தீவிரமாக விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு, சத்தியா தம்பதியினர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வளாகத்திற்குள் சென்று படுக்கையில் இருந்த ஆண் குழந்தையை கடத்தி கொண்டு மருத்துவ சீட்டுகள் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டு செக்யூரிட்டிகளை கடந்து மருத்துவமனையின் மெயின் கேட் வழியாக வெளியேறி மருத்துவமனைை அருகே சாலையில் இருந்த ஆட்டோ பிடித்து அவசரமாக பேருந்து நிலையம் செல்லவேண்டும் என கூறி சென்றுள்ளார்கள்.
ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் என்பவர் இவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போதுதான் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சுரேஷுக்கு தெரியவந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு செக்யூரிட்டிகள் , ஜனார்த்தனன் ராஜ்குமார் அவர்களை பேருந்து நிலையம் சென்று தேடுமாறு அறிவுறுத்தியது. அதன்படி பேருந்து நிலையம் சென்ற இவர்களைக் கண்டு கடத்தல் கும்பல் கடையின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ள முயன்றனர்.
சுமித் ஒப்பந்த தொழிலாளர், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகிய இருவரும் குழந்தை கடத்திய இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் . கடத்தலுக்கு துணை சென்ற ராமுவிடம் விசாரணை செய்ததில் சத்யா அரசு மருத்துவமனைக்கு முன்பே வந்து விட்டதாகவும் ராமு சத்யாவை தேடி அரசு மருத்துவமனைக்கு வரும் பொழுது சத்யா கையில் ஆண் குழந்தை ஒன்றை வைத்து இருப்பதை பார்த்ததாகவும் கூறியுள்ளார். சத்யாவுடன் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் மகப்பேறு வளாகத்தில் சிகிச்சைக்காக தான் வந்ததாகவும் அப்போது வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும் குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தை விட்டு சென்று விட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் கூறியிருக்கிறார்
.
சமீப காலமாக இந்த மருத்துவமனையில் நிர்வாக கோளாறு காரணமாக பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது மேலும் இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக "பெரிய நெட்வொர்க்" உள்ளதாகவும், மருத்துவமனையின் உள்ளே உள்ள சில ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர் . இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை செய்தால்தான் இது போன்ற சம்பவங்களை கண்டறிந்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மருத்துவர்கள் உரிய கண்காணிப்பு இல்லாததே குழந்தையை எளிதாக திருடிச் சென்றது தெரியவந்துள்ளது என மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மட்டுமின்றி முதியவர்களை குறிவைத்து நகைகளை நூதன முறையில் பறித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுவது வழக்க்கமாகி வருகிறது.