காஞ்சியில் தொடரும் நிதி நிறுவன மோசடி; முக்கிய நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்
காஞ்சிபுரம் டே பை டே நிறுவனம் 24 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் (Kanchipuram News): மக்களிடம் பேராசையை தூண்டி பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் செல்ல அவ்வப்பொழுது, ஏதாவது ஒரு பெயரில் ஒரு கூட்டம் நூதன முறையில் மோசடி செய்து விட்டு செல்வது வழக்கமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், கடந்தாண்டு நடைபெற்ற மிகப்பெரிய மோசடிகளில் ஒன்று, டிரேடிங் என்ற பெயரில் தமிழ்நாட்டில் நடந்தேறியது. இதில் சிக்கி பணத்தை ஏமாந்தவர்கள் பலரும், நடுத்தர வர்க்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
"கோடி கோடியாய் அள்ளிச்சென்ற நிறுவனங்கள்"
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒருமாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே.சுரேசுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.
"டே பை டே மோசடி "
ஆருத்ரா உள்ளிட்ட பல்வேறு பெரிய நிதி நிறுவனங்களை தொடர்ந்து, குட்டி குட்டி நிதி நிறுவனங்களும் சமகாலத்தில் செயல்பட்டு வந்தது. அந்த வகையில் காஞ்சிபுரம் பங்காரு அம்மன் தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தின் பெயர் தான் ‘டே பை டே’. இந்த நிதி நிறுவனம் மாத வட்டி இல்லாமல் தின வட்டி எனக் கூறி முதலீட்டாளர்களிடம் பணத்தைப் பெற்றது. ஒரு லட்சம் முதலீடு செய்தால் தினமும் 1500 ரூபாய் தரப்படும் என அந்த நிதி நிறுவனம் வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இதுபோக அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்களில் இணைத்து விடும் முகவர்களுக்கு தினமும் 500 ரூபாய் மற்றும் இரண்டு கிராம் தங்கம் வழங்கப்படும் எனவும் தெரிவித்ததால் பலரும், முகவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
ரூ.24 கோடி மோசடி என புகார்
இந்த நிதி நிறுவனம் சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், 24 கோடி ரூபாயை முதலீடாக பெற்றுக் கொண்டு அதன் முதலீட்டாளர்கள் தலைமறைவு ஆனார்கள். இந்த நிதி நிறுவனத்தை காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரும் நடத்தி வந்தனர். சுமார் 24 கோடி ஏமாற்றியது தொடர்பாக காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம், பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்த வாசுதேவன் மற்றும் தனது சொந்த ஊரில் பதுங்கி இருந்த சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.