முகப்புசெய்திகள்சென்னைTTF Vasan: டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு... காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி..!
TTF Vasan: டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு... காஞ்சிபுரம் நீதிமன்றம் அதிரடி..!
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
By : கிஷோர் | Updated at : 21 Sep 2023 01:18 PM (IST)
TTF வாசன்
டிடிஎஃப் வாசன்
பிரபல யூடியூபர் TTF வாசன் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டார். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று குட்டி கரணம் அடித்தபடி சாலை ஓரப்பள்ளத்தில் விழுந்த நிலையில், வாசன் அதிர்ஷ்டவசமாக காயத்துடனே உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் சிக்கிய TTF வாசன் வலது கை முறிவுக்கு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு சென்னைக்கு திரும்பி சென்று விட்டார்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்நிலையில் அவரது இருசக்கர வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது ஏற்கனவே 279,336, ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு , அதிகாலை திருவள்ளூர் அருகே பூங்கா நகர் பகுதியில் இருந்த TTF வாசனை பாலு செட்டி சத்திரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாசன் மீது மேலும் கூடுதலாக 308,184,188, மூன்று பிரிவுகள் பதியப்பட்டது. TTF வாசனிடம் பாலு செட்டி சத்திரம் காவல்நிலையத்தில் வைத்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
15 நாள் சிறை
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்த நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி வரை வாசனை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து வாசனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி
உடல்நலக்குறைவு மற்றும் விபத்து ஏற்பட்டதில் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த பொழுது ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன ?
காஞ்சிபுரம் தாமல் பகுதியை சேர்ந்த பால வேந்தன் என்பவர் கடந்த 18ஆம் தேதி பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கடந்த 17ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் சென்னை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு பைபாஸ் பாலம் அருகே ஒரு மேட் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக கவனம் குறைவாக ஓட்டி வந்து , பொதுமக்கள் பயணம் செய்யக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மனித உயிருக்கு மரண விளைவிக்கும் வகையிலும், மோட்டார் சக்கரத்தில் முன் சக்கரத்தில் தூக்கி ஓட்டிக்கொண்டு சாகசம் செய்து பயங்கரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட விபத்தை நேரில் பார்த்தேன். கீழே விழுந்து இருந்த நபரை எழுப்பி விசாரித்த பொழுது தான் டிடிஎஃப் வாசன் என கூறினார். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது என அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.