(Source: ECI/ABP News/ABP Majha)
கல்குவாரியால் என் நிலம் பாழாகி விட்டது...! - 7 கோடி நஷ்ட ஈடுகேட்டு காஞ்சி ஆட்சியரிடம் மன்சூர் அலி கான் மனு
தங்களை அலைபேசியில் பலமுறை அழைத்தும் தாங்கள் ஒரு முறை கூட அலைபேசியை எடுக்கவில்லை என காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மன்சூர் அலிகான் வருத்தத்துடன் கூறினார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் காலை 10 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். அவ்வகையில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து தனது குறைகளை மனுவாக எழுதி விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுத்தார்.
அம்மனுவில், தனக்கு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை பூமி உள்ளது. இந்த நிலத்திற்கு தற்போது வரை முறையான வரிகட்டி வருகிறேன். தனது நிலத்தில் 800க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது. தனது நிலத்தை ஒட்டி கடந்த 24 வருடங்களாக கல்குவாரி அரவை நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் கழிவுகள் தனது நிலத்தில் பாய்ந்து விவசாய நிலத்தை சீரழித்து விட்டது. நிலத்தில் மாசு படிவதால் 5 கோடி ரூபாயும் அந்த மாசுகளை அகற்ற 2 கோடி ரூபாயும் என 7 கோடி ரூபாயை பெற்றுத்தர வேண்டும் எனவும் உடனடியாக விவசாய நிலப் பகுதிகளில் செய்யப்படும் கல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் அப்பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரமான ஏரிகளில் கழிவுகளை கலந்து ஏரியை மாசு ஏற்படுத்தி வருவதாகவும், உடனடியாக சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அப்பகுதியில் எங்கும் தொழிற்சாலைகளை மூடி பொதுமக்களை காக்க வேண்டும் என கேட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த போது, தங்களை அலைபேசியில் பலமுறை அழைத்தும் தாங்கள் ஒரு முறை கூட அலைபேசியை எடுக்கவில்லை என வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்