Kallakurichi Incident: நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நாளை காலை 6 மணி அல்லது 7 மணிக்கு மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும். நாளை காலை 11 மணிக்குள் இறுதி சடங்கை நடத்த நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு.
சின்ன சேலம் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 7 மணிக்குள் பெற்று, மாலை 6 மணிக்குள் இறுதி சடங்குகளை முடிக்க வேண்டுமென தந்தை ராமலிங்கத்திற்கு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்ன சேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து நேற்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு, மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென நேற்று முறையீடு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு நகலை தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். அதை முழுமையாக படித்துப்பார்த்த நீதிபதி, நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா??? இல்லையா??? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தடயவியல் துறையை சேர்ந்த செல்வக்குமாரிடம் சில விளக்கங்களை கேட்டு பெற்றுக்கொண்டார்.
அதற்கு விளக்கம் அளித்த செல்வக்குமார், அரசு மருத்துவர்களால் இரண்டு முறையும் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, இரு முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாவது முறை உடற்கூறாய்வு செய்தபோது, புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார். பின்னர் நீதிபதி, மனுதாரர் தரப்பிடம், மகளை இழந்த பெற்றோரின் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்வதாகவும், அதேசமயம் நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை ஏற்படுத்துகிறீர்கள் என்றும், அமைதியான தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, மகளின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் மாணவி உடல் மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என்றும், இந்த வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் என்றும், அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தபோது, அதுகுறித்து தமிழக முதல்வர் ஆலோசித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுவதாக குற்றம்சாட்டிய நீதிபதி, அது மனுதாரர் தரப்பிற்கு தெரியாமலேயே நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மாணவி மரணம் தொடர்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்பி உள்ளன என்றும் குற்றம்சாட்டினார்.
அதன்பின்னர் உடற்கூராய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையின் 3 மருத்துவர்கள் மற்றும் தடவியவியல் நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அறிக்கைகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஜிப்மர் தரப்பிடம் ஒப்படைக்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார்.
பின்னர் மனுதாரர் தரப்பிடம், மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எப்போது உடலைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், உடலை பெற்று கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் தெரிவித்தார். மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிசடங்குகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து மகளின் உடலை பெற்றுக்கொள்வதாகவும், நாளை நண்பகல் 11 மணிக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில் கடைசி நேரம் வரை இக்கட்டான சூழலை வைத்திருக்கவே மனுதாரர் விரும்புவதாகவும், முன்னதாக உடலை பெற்று, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இறுதி சடங்கை நடத்த வேண்டுமென வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, நாளை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், மாலைக்குள் இறுதி சடங்குகளை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். ஜிப்மர் மருத்துவனனையின் அறிக்கைகளை தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.