தண்டையார் பேட்டையில் பெட்ரோல் பாய்லர் வெடித்து தீப்பற்றி விபத்து; ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
தண்டையார் பேட்டையில் பெட்ரோல் பாய்லர் வெடித்து தீப்பற்றி விபத்து; ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இங்கு இருந்து பெட்ரோல் டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதாவது டிசம்பர் 27ஆம் தேதி பெட்ரோல் பாய்லர் திடீரென வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் உள்ளே பணிபுரிந்துகொண்டு இருந்த ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து பயத்துடன் வெளியே ஓடி வந்தனர். இந்த விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
தண்டையார்பேட்டை ராயபுரம் திருவெற்றியூர் கொடுங்கையூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் பணியாற்றி வந்த பெருமாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சரவணன் என்பவர் பலத்த காயங்கள் ஏற்பட்டு தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்