மேலும் அறிய
Advertisement
உத்தரமேரூர் : 1000 ஆண்டு பழமைகொண்ட சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டெடுப்பு..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சப்தமாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில், சோழர் காலத்தைச் சார்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுவர் அன்னையர் எனப்படும் சப்த மாதர்கள் சிற்பத் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் தலைமையில் அனுமந்தண்டலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த சிற்பத் தொகுப்பை கண்டறிந்தனர்.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுப்பானது ஒரே பலகைக்கல்லில் 1 1/2 அடி உயரம் 4 1/2 அடி நீளம் கொண்ட எழுவர் அன்னை எனப்படும் சப்த மாதர்கள் தொகுப்பு ஆகும் . இச்சிலை அழகிய வேலைப்பாடுகளுடன் அமர்ந்த நிலையில் இரு கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டபடி காணப்படுகிறார்கள். முதலில் பிராமியும், இரண்டாவதாக மகேஸ்வரியும் ,மூன்றாவதாக கௌமாரியும், நான்காவதாக வைஷ்ணவியும், ஐந்தாவதாக வராகியும், ஆறாவதாக இந்திராணியும், ஏழாவதாக சாமுண்டியும், அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களு டன் காட்சியளிக்கிறார்கள்.
பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்கள் காணப்படவில்லை இவ்வூர் மக்கள் இதை அலையாத்தி அம்மன் என்கிறார்கள். ஆனால் இது எழுவர் அன்னையர் எனப்படும் சப்தமாதர்கள் ஆகும். இது தாய்த்தெய்வ வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும், உலகெங்கிலும் தாய் தெய்வ வழிபாடு என்பது நீக்கமற நிறைந்துள்ளது.
வளமையின் அடையாளமாக வேளாண்மை செழிக்க செல்வ வளம் பெருக குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழ, வெற்றியின் அடையாளமாக மன்னர்கள் நாட்டை வென்றிட இன்ன பிற நன்மைகள் வேண்டி மன்னர் முதல் மக்கள் வரை வழிபட்டது தாய்வழி வழிபாடாகும். இதன் முதல் வழிபாடாக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக இந்த எழுவர் அன்னையர் வழிபாடு உள்ளது. பாண்டியர்கள், பல்லவர்கள் ,சோழர்கள் விஜயநகர மன்னர்கள் வரை சிறந்த வழிபாடாக தொடர்கிறது.
தமிழகத்தின் மிகப் பழமையான முக்கிய கோயில்களில் ஒன்றான காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் இந்த சிற்பங்கள் இன்றைக்கும் காட்சியளிக்கின்றன. சிலப்பதிகாரம்,கலிங்கத்துப்பரணி ,திருமந்திரம் முதலிய நூல்களில் எழுவர் அன்னையர் வழிபாடு குறித்த குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. கிபி ஆறாம் நூற்றாண்டில் பிருகத்சம்கிதை என்கிற நூலில் எழுவர் அன்னையர் தோற்றம் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் இந்த பக்தி வரலாற்று கலைப் பொக்கிஷங்களை பாதுகாப்பது நம் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சப்தமாதர்கள்
சிவ பெருமானுக்கும் அந்தகாசுரனுக்கும் போர் நடக்கிறது, அந்தகாசுரன் உடலில் இருந்து சொட்டும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒவ்வொரு அந்தகாசூரர்களாக மாறி பெரும் போர் புரிந்தார்கள். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் தன் நாக்கு தீச்சுவாலையிலிருந்து மகேஸ்வரி எனும் பெண் சக்தியை உருவாக்கினார்.இதே முறையில் பிரம்மா பிராமியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், முருகன் கௌமாரியையும், இந்திரன் இந்திராணியையும், திருமால் வாராகியையும், எமன் சாமுண்டியையும், பெண் சக்திகளாக உருவாக்கி போர் புரிந்தார்கள். இவ்வெழுவரும் அசுரர்களின் ரத்தத்தை குடித்து இந்த பெரும் போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள் இப்படித்தான் எழுவர் அன்னையர்கள் உருவானார்கள் என்பது புராணக்கதை.
வரலாற்றுப் பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion