நில அபகரிப்பு வழக்கில், இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது
நில அபகரிப்பு புகாரில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் தொடர்புடைய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி கைது செய்துள்ளது
கடந்த 2019-ஆம் ஆண்டு அய்யப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.
தொழிலதிபர் ராஜேஷ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் டிஜிபி அலுவலகத்திற்கு இந்த புகாரை சென்னை போலீசார் அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் மீதான இந்த புகார் குறித்து முகாந்திரம் இருக்கிறதா விசாரிக்க தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபரை கடத்தி நில மோசடி செய்தது தெரியவந்ததால் திருமங்கலம் உதவி ஆணையராக இருந்த சிவக்குமார், காவல் ஆய்வாளராக இருந்த சரவணன், காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாண்டியராஜன், அனைத்திந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலி ஆவணங்கள் தயாரித்தல், பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் கானத்தூர் அருகே கோடம்பாக்கம் ஸ்ரீயை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், நில அபகரிப்பில் காவல்துறையினரே ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.