Zero Carbon: "ஜீரோ கார்பன்" தொழில் பூங்கா.. அரசின் சூப்பர் முயற்சி.. இணையும் சிங்கப்பூர்..!
NET Zero Carbon Emissions: திருவள்ளூரில் ஜீரோ கார்பன் தொழில் பூங்கா சிங்கப்பூருடன் இணைந்து அமைக்க முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது

Zero carbon emissions: " சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி பகுதியில், ஜீரோ கார்பன் தொழில் பூங்கா அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது"
தொழில் பூங்காவும் தமிழக அரசும்
தமிழ்நாடு அரசு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சிப்காட் அமைத்து, தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை தொடங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று தமிழ்நாட்டில் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
சென்னை தனது அதிகபட்ச வளர்ச்சியை அடைந்துள்ளதால், சென்னையில் தொழில் தொடங்குவதற்கு இடம் இல்லாமல் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொழில் தொடங்கப்பட்டு வருகிறது.
"நெட் ஜீரோ" தொழில் பூங்கா திட்டம்
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து, சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் " நெட் ஜீரோ" ( Net Zero) என அழைக்கப்படக்கூடிய தொழில் பூங்காக்களை அமைக்க அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழில் பூங்கா முன்மாதிரி பூங்காவாக அமைய இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த தொழில் பூங்கா அமைந்தால், பூங்காவில் உள்ள அனைத்து நிறுவனங்களும், காற்றாலை, சூரிய சக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்தும். அதே போன்று பசுமை சார்ந்த தொழிலில் ஈடுபட உள்ள நிறுவனங்களுக்கு இங்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்படும்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
முதற்கட்டமாக அரசு தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு நிலங்களை வழங்கும். அதற்கான கட்டமைப்புகளை வசதிகளையும் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இதற்காக சிங்கப்பூர் மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினருடனும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காகத் டெண்டர் விடப்பட்டு, டெண்டர் எடுக்கும் நிறுவனங்களுடன் இணைந்து பூங்கா அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு அம்சங்கள் என்னென்ன ? Key Features Of Zero Carbon Emissions Industry
ஜீரோ கார்பன் எனப்படும் கார்பனை வெளியேற்றாத நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் இந்த தொழில் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் இங்கு செயல்படும் நிறுவனங்கள் மூலமாக சுற்றுச்சூழலுக்கு பெரும் அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.
இந்த தொழில் பூங்கா முன்மாதிரியாக அமை.யப்பட உள்ளதால், அரசு சார்பில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பூங்கா வெற்றி பெற்றால் இதேபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஜீரோ கார்பன் தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.





















