13 வயது சிறுமி உயிரிழப்பு : குளிர்பான ஆலையை தற்காலிகமாக மூடிய அதிகாரிகள்..!
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததுடன், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சென்னையில் குளிர்பானம் குடித்து 13 வயது சிறுமி உயிரிழந்ததாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, சோழவரம் ஆத்தூர் பகுதியில் உள்ள குளிர்பான ஆலையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சிறுமி குடித்த குளிர்பான தயாரித்த பேட்ஜ் எண் கொண்ட பெட்டிகள் அனைத்து கடைகளில் இருந்தும் திரும்பபெற வேண்டும் எனவும், ஆய்வு மாதிரிகள் சோதனை செய்யப்படும் வரை ஆலையை தற்காலிகமாக மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
13 வயது சிறுமி மரணம்:
சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெசன்ட் நகர், ஓடை தெரு பகுதியைச் சேர்ந்த சதீஷ்-காயத்திரி தம்பதியின் 13 வயது இளைய மகள் தரணி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மணி என்பவரின் கடையில் ’டொகிட்டோ கோலா’ என்ற குளிர்பானம் மற்றும் ’ரஸ்னா’ ஆகியவற்றை வாங்கியுள்ளார். அந்த இரண்டு குளிர்பானங்களையும் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி தரணிக்கு வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே மயங்கிய நிலையில் இருந்த தரணியை அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சிறுமி தரணியின் உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி தரணி உயிரிழந்தது குறித்து உறவினர்கள் மளிகை கடையில் கேட்டபோது மளிகை கடை உரிமையாளர் மணி அலட்சியமாக பதிலளித்ததாக உயிரிழந்த சிறுமி தரணியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ததுடன் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி தரணி உட்கொண்ட குளிர்பானம் மற்றும் ரஸ்னா ஆகியவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ள போலிசார், சிறுமியின் உயிரிழந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவித்தனர். பெசண்ட் நகரில் மணி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் காலாவதியான, தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வதாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்களும், பெசண்ட்நகர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
பெசண்ட்நகர் பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளிலும், தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் காலாவதியான தரமற்ற உணவு பொருட்களை லாபத்திற்கு ஆசைப்பட்டு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X