மேலும் அறிய
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்...! பேராசிரியருக்கு மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணோடு இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டல்...!
மத்திய அரசு பேராசிரியருக்கு மயக்க மருந்து கொடுத்து , இளம் பெண்ணோடு ஒன்றாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது

பேராசியரை மிரட்டியவர்கள்
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) (59). இவர் மத்திய அரசுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மூலமாக ராதா (40) என்பவர் அறிமுகமாகி உள்ளார். ராதா சுய தொழில் தொடங்க கடனாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வரை சந்திரனிடம் பெற்றுள்ளார். நீண்ட நாட்களாகியும் பணம் தராத காரணத்தினால் சந்திரன் கடந்த 2019 ஆம் ஆண்டு ராதா மீது வழக்கு தொடர்ந்து தற்போது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் அந்த வழக்கில் சரியான முறையில் ராதா ஆஜராகாத காரணத்தினால் சமீபத்தில் ராதாவிற்கு நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா சமீபத்தில் சந்திரனை தொலைபேசியில் அழைத்து பணத்தைத் தந்து விடுவதாகவும் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அதன் பேரில் கடந்த 19ம் தேதி கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் முதல் தெரு பகுதியில் உள்ள ராதாவின் தோழியான புஷ்பா (49). என்பவரது வீட்டிற்கு சந்திரனை வர வைத்தள்ளார். அங்கு சந்திரன் வந்தவுடன் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கியவுடன் சந்திரனுடன் லட்சுமி (30) என்ற பெண்ணுடன் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ மற்றும் வீடியோவை எடுத்துள்ளனர். இதற்கு லட்சுமியின் கணவர் முருகன் என்பவரும் துணையாக இருந்துள்ளார். சந்திரன் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் இனி பணம் கேட்டால் நீ லட்சுமியுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொடுங்கையூர் போலீசார் கோயம்பேடு ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா , விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த லட்சுமி அவரது கணவர் முருகன் மற்றும் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புஷ்பா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவரிகளிடமிருந்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்ற வழக்கில் நண்பர்கள் ஜாமீனில் எடுக்காததால் வாலிபருக்கு சரமாரி கத்திக் குத்து
சென்னை ஓட்டேரி தாசாமகான் 3 ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நசீர் (30). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் புளியந்தோப்பு வ.உ.சி நகர் 2 வது தெரு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (22) இவரது தம்பி அபி (எ) அபிமன்யு. அண்ணன் தம்பி இருவரும் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நசீர், தேவேந்திரன், அபிமன்யு 3 பேரும் சேர்ந்து திருவான்மையூர் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வழக்கில் தேவேந்திரன் மற்றும் அவரது தம்பி அபிமன்யு ஆகிய இருவர் மட்டும் ஜாமினில் வெளியே வந்தனர். நசீரை இவர்கள் ஜாமினில் வெளியே எடுக்கவில்லை அதன் பிறகு சில மாதங்கள் சிறையில் இருந்த நசீர் சமீபத்தில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஓட்டேரி பி.எஸ் மூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நசீர் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தேவேந்திரனை அழைத்து ஏன் என்னை ஜாமீனில் வெளியே எடுக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தேவேந்திரன் வீட்டிற்குச் சென்று தனது தம்பி அபிமன்யுவிடம் நடந்ததைக் கூறி வீட்டிலிருந்து கத்தியை எடுத்துக் கொண்டு இருவரும் நசீர் மது அருந்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து நசீரை ஓங்கி கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளனர். இதில் நசீருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி அங்கேயே மயங்கி விழுந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















