முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்... ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு... காத்திருக்கும் சர்ப்ரைஸ்...
Ford Reentry: மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் நிறுவனத்துடன் பேச்சு
![முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்... ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு... காத்திருக்கும் சர்ப்ரைஸ்... Ford reentry in Tamilnadu tamilnadu chief minister mk Stalin speaks with Ford officials TNN முதலமைச்சரின் மாஸ்டர் பிளான்... ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சு... காத்திருக்கும் சர்ப்ரைஸ்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/11/80412f169bba8d3faa7ac0dd34439dd51726030476076739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஃபோர்டு நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் , படிப்படியாக உற்பத்தி குறைக்கப்பட்ட 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஃபோர்டு தனது கடைசி காரை தயாரித்து, இனி இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என அதிகாரம் பூர்வமாக அறிவித்தது.
இதனால் சென்னை தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் செட்டில்மெண்ட் அறிவித்தது. பெரும்பாலான ஊழியர்கள் செட்டில்மெண்ட் தொகையை பெற்ற நிலையில், சில ஊழியர்கள் அதைப் பெற்றுக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு ,கடந்த ஜனவரி மாதம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்
இந்தநிலையில், ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் மறைமலைநகர் தொழிற்சாலையை விற்க முடிவு செய்திருந்தது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. ஜே.எஸ்.டபிள். யூ நிறுவனம் ஃபோர்டு தொழிற்சாலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியது. இந்தநிலையில் சென்னை ஆலையை கிட்டத்தட்ட 830 கோடி ரூபாய்க்கு விற்பதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு இருந்தது என தகவல் வெளியாகி இருந்தது.
பின்வாங்கிய ஃபோர்டு நிறுவனம்
இந்நிலையில் தன் தொழிற்சாலையை விற்க விரும்பாததால், ஃபோர்டு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சென்னை மறைமலை நகரில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில், இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்ய ஃபோர்டு மோட்டார்ஸ், நிறுவனம் பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்த நிலையில், அதிலிருந்து ஃபோர்டு நிறுவனம் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 12ஆம் தேதி வரை அதாவது 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் மு.க ஸ்டாலின், தொழில் முதலீடுகளையும் ஈர்த்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் , அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் கார் உற்பத்தி தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் ஃபோர்டு நிறுவனத்திற்கும் இருக்கும் , நல்லுறவு ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிரம்மாண்ட கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் தன்னுடைய கார் உற்பத்தியை தொடங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)