மேலும் அறிய
துருப்பிடித்து வீணாய் போன விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்கள்...! - குப்பையாய் மாறிய மக்கள் வரிப்பணம்
’’2011-16 அதிமுக ஆட்சியில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் யாருக்கும் விநியோகிக்காமல் குடோனில் வீணாகி வருகிறது’’

துருபிடித்த மிக்சி, கிரைண்டர்கள்
2011ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு தொடர்ந்து அதிமுக தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வந்தது. தமிழ்நாடு தேர்தல் என்றாலே பொது மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வீட்டிற்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் விலையில்லா மிக்சி கிரைண்டர் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்ற பின்பு சில மாதங்களிலே, அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. சிலகாலம் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார் அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இறுதி வரை முதலமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் புதியதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மே மாதம் முதல் பதவி வகித்து வருகிறது.

பொதுமக்களுக்கு இலவசமாக தருவதற்காக, மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப்பொருட்கள் ஆயிரக்கணக்கில், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்டன. அவற்றை அதிமுகவினர் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்கவில்லை என குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வந்தது.

அதற்கேற்றார்போல் தற்போது செங்கல்பட்டு பழைய தாலுகா அலுவலகம் இருக்கும் இடத்தில் ஏராளமான விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் ஆகியவை துருபிடித்த நிலையில், குவியல்குவியலாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு நகராட்சியின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில், இரண்டு, மூன்று அறைகளில் மக்களுக்கு கொடுக்க வேண்டிய விலையில்லா பொருட்கள் பாழடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற பதிக்க வைத்து இருக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.இதுகுறித்து விசாரித்தபோது, ஆட்சி மாறிய பொழுது தான் இந்த இடத்திற்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

விலையில்லா பொருட்கள் பொதுமக்களுக்கு கொடுப்பதாக கூறிய வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே கொடுக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், இதுபோன்று மக்களின் வரிப்பணம் அதிகாரிகளால் வீணாக்க படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















