Local Trains Cancelled: கூடுதலாக ரத்தாகும் 8 ரயில்கள்.. பயணிகளுக்கு தொடர் தலைவலி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்
Chennai Local Trains Cancelled: சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை காலை 9:30 மணி முதல் 12 மணி வரை பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு- தாம்பரம் தடத்தில் நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரை ஏற்கனவே 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் மேலும் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மீண்டும் ரயில்கள் ரத்து
இது தொடர்பாக சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை காலை 7:17, காலை எட்டு பத்தொன்பது மணி, காலை 9 மணி, காலை 9:22 மணி, காலை 9:40 மணி, காலை 9:50 மணி மற்றும் இரவு 6:26 மணி, இரவு 7:15 மணி ஆகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
இதேபோன்று நாளை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார விரைவு ரயில்கள், தாம்பரம் கடற்கரை இடையிலான அனைத்து ரயில் நிலையங்களும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு கடற்கரை இடையே காலை 7:45 மணி, 8:05 மணி, 8:50 மணி மின்சார விரைவு ரயில்களும், அரக்கோணம் முதல் சென்னை கடற்கரை இடையிலான மாலை 5 மணி ரயிலும், தாம்பரம் கடற்கரை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே காலை 8:26, 8:39 மணிக்கு புறப்படும் பெண்களுக்கான ரயில்கள் நாளை முதல் 14 ஆம் தேதி வரை அனைவரும் பயணம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுபோக சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் வரை காலை 9:30 மணி முதல் 12 மணி வரை பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்லாவரம் முதல் கடற்கரை வரை காலை 10 மணி முதல் இரவு 11:55 மணி வரை பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது