"இனி 100 அல்ல 1000"... விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!
வட்டாட்சியர் பெயரில் வழங்கப்பட்ட உத்தரவில் வெறுமனே "விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று மட்டுமே இருந்ததாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் சமர்பித்திருந்தர்.
இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்து பிரச்னையை விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மகன் இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த தாய்க்கு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து போடப்பட்ட வழக்கை ஒட்டி, இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம், சேலத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் கோரி அரசின் இ-சேவை மையம் மூலம் அவரது தாயார் சின்னப்பிள்ளை என்பவர் விண்ணப்பம் அளித்திருந்தார். அவரது தாயார் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சின்னப்பிள்ளை வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெளிவாக அளிக்கப் படவில்லை என குறிப்பிட்டுள்ளார். வட்டாட்சியர் பெயரில் வழங்கப்பட்ட உத்தரவில் வெறுமனே "விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று மட்டுமே இருந்ததாக தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் சமர்பித்திருந்தர்.
நேரடியாக வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது சில காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படும். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் 2019 ஆண்டு சுற்றறிக்கை அடிப்படையில், இந்த சான்றிதழ் வழங்கும் முறை என்னவென்றால், வருவாய் ஆய்வாளர்கள் (RI) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) ஆகியோர் நேரடி விசாரணை மேற்கொள்வார்கள். அந்த விசாரணையில் அளிக்கப்படும் அறிக்கை ஆகியவற்றை பரிசீலனை செய்து வட்டாட்சியர்கள் சான்றிதழ் வழங்கும் முறையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என்று நிராகரிக்கப்படும்.
ஆனால் அதற்கான காரணங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அதனை 100 எழுத்துக்களில் கூற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் சின்னபிள்ளைக்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அப்படி இல்லாததால், நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், உத்தரவுகள் விளக்கமாக அளிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள இ-சேவை முறையில் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு கடந்த முறை விசாரனைக்கு வந்தபோது, இந்த நடைமுறைச் சிக்கலை தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தார்.
தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அரசு வழக்கறிஞர் டி.என்.சி. கௌசிக் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசு இ-சேவை மூலமாக வாரிசு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் மனுக்கள் நிராகரிக்கப்படும் போது, அதற்கான காரணங்களை 100 எழுத்துகளில் தெரிவிக்க வேண்டுமென்ற வரையறையை, 1000 எழுத்துக்கள் என மாற்றி அமைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை உடனடியாக செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற கருத்தினை உடனடியாக பரிசீலனை செய்து மக்கள் பயனடையும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.