கனமழையால் ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட்! வானிலையே வட்டமடித்த விமானங்கள்..! நடந்தது என்ன?
7 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதில் ஒரு விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு. 7 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதில் ஒரு விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதை போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள், தாமதமாகியதால், சென்னை விமான நிலையத்தில், வருகை, புறப்பாடு 15 விமானங்கள், தாமதமாகி பயணிகள் கடும் அவதி.
திடீரென இடி மின்னல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில், திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதை அடுத்து அந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து தத்தளித்து கொண்டு இருந்தன.
அதன்படி துபாயில் இருந்து 262 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 314 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து 248 பயணிகளுடன் வந்த எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து 368 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புனேயில் இருந்து 140 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் பிராங்பார்டிலிருந்து, சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து, தத்தளித்துக்கொண்டு இருந்தன.
மழை ஓய்ந்ததும்
அதன்பின்பு துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் நீண்ட நேரம் வானவில் வட்டமடிக்கு பறந்து கொண்டு இருந்தன . சுமார் ஒரு மணி நேரத்தில் மழை ஓய்ந்ததும், அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்தி தரையிறங்கின. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பார்ட், அபுதாபி, சார்ஜா,தோகா, துபாய், டெல்லி, அகமதாபாத் 8 விமானங்கள், தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
அதில் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பிச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் விமானம், சென்னையில் இருந்து மீண்டும் அதிகாலை 4 மணிக்கு, துபாய்க்கு புறப்பட வேண்டியது, ஐந்தரை மணி நேரம் தாமதமாக, காலை மாலை 9.30 மணிக்கு, புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த, இடி மின்னல் சூறைக்காற்று மழை காரணமாக, 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
எங்கெல்லாம் கனமழை பெய்தது?
மழை பெய்தபோது, இடி மற்றும் மின்னலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அதே போல குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 8.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.