![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?
சென்னை புறநகர் பகுதிகளில், நேற்று இரவு பெய்த கனமழை இடி மின்னல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதி.
![சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன? due to heavy rain in Chennai and Chennai international Airport areas 38 flights are cancelled tnn சென்னை வானில் வட்டமடித்து தத்தளித்த விமானங்கள்.. பெங்களூருவில் தரை இறக்கம்.. காரணம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/26/b8cb28daa7659e5b63d6642f927b69771727318328119739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை புறநகர் பகுதிகளில், நேற்று இரவு பெய்த கனமழை இடி மின்னல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதி. திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
சென்னையில் கனமழை - Chennai Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து விட்டு விட்டு, மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு 9 மணிக்கு மேல், மிகவும் கனமழையாக மாறி, இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில், கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக, விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
வானில் வட்டமடித்த விமானம்
நேற்று இரவு பெங்களூர், மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சி, திருவனந்தபுரம், கோலாலம்பூர் உட்பட 13 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து, தத்தளித்துக் கொண்டு இருந்தன.
அவ்வப்போது மழை சிறிது ஓயும் போது, வட்டமடித்து பறந்து கொண்டு இருந்த விமானங்கள், அவசரமாக சென்னையில் தரையிறங்கின. ஆனால் திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் சென்னைக்கு இரவு 10.05 மணிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால், வானில் தொடர்ந்து வட்டம் அடிக்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர், சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட 20 விமானங்கள், சுமார் 2 மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டு சென்றன. அதோடு நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதேபோல் சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டன.
இதைப்போல் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை இடி மின்னல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 13 வருகை விமானங்கள், 20 புறப்பாடு விமானங்கள், ரத்தான 2 விமானங்கள், மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
வெள்ளக்காடாய் மாறிய சென்னை
திடீரென இடி மற்றும் பலத்த காற்றுடன் இந்த மழையால் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள், வானக ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் வெள்ளம்போல ஓடியது. அண்ணாநகரின் சில பகுதிகள், ராயப்பேட்டையில் உள்ள சில பகுதிகள் என சென்னையின் பல சாலைகள் தண்ணீரில் தத்தளித்தது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக அம்பத்தூரில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியது. வானகரம், மணலியில் 12 செ,.மீட்டர் மழை பதிவாகியது. அண்ணாணநகரில் 11 செ.மீட்டர் மழை பதிவாகியது. ஓரிரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் மணலியில் 15 செ.மீட்டர் மழை பதிவாகியது. தற்போது மீண்டும் மணலியில் 12 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)