சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்...! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 8-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோம் நிறுத்தப்படுவதாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 9-ஆம் தேதி காலை 6 மணி வரை மண்டலம் 13,14 மற்றும் 15க்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 08.06.2023 அன்று காலை 10 மணி முதல் 09.06.2023 அன்று காலை 6 மணி வரை மண்டலம்-13, 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மண்டலம்-13-ல், வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகள்.
மண்டலம்-14-ல்,பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி பகுதிகள்.
மண்டலம் 15-ல், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் பகுதிகள்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்”.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!