Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
காப்பாற்று, காப்பாற்று, மருத்துவத் துறையையும் மருத்துவர்களையும் காப்பாற்ற என்ற முழக்கங்கள் போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட நிலையில், பணி பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தியது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பணி பாதுகாப்பு தேவை – மருத்துவர்கள் வேண்டுகோள்
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயமான அறிக்கையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டத்தை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நடத்தியுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் கொட்டும் மழையில் போராட்டம்#DoctorProtest #stanleyhospital #TNGovt #MaSubramaniyan pic.twitter.com/gqesdIpywf
— James fernando (@Jamesfernando27) November 14, 2024
கேட்குதா ? கேட்குதா? உள்ள குமுறல் கேட்குதா ?
போராட்டத்தின் போது கேட்குதா ? கேட்குதா ? உள்ள குமுறல் கேட்குதா ?, தமிழக அரசே, தமிழக அரசே,தமிழக அரசே தமிழகம் முழுவதும் கொந்தளிக்கின்றோம் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில், காப்பாற்று, காப்பாற்று, மருத்துவத் துறையையும் மருத்துவர்களையும் காப்பாற்ற என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.
கொட்டும் மழையில் நடந்த இந்த போராட்டதை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் ஒருங்கிணைத்தது. இதனால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்கள் கூட வந்தவர்கள் என பலரும் சிரமப்பட்டனர். இருப்பினும், மருத்துவர்களை பாதுகாத்தால் மட்டுமே தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் வழங்க முடியும் என்பதால் சற்று சிரமம் ஏற்பட்டாலும் நோயாளிகள் அதனை பொறுத்துக்கொண்டு போராட்டம் முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.