டிட்வா புயல் : சென்னைக்கு அருகில் புயல் ? 10 மீட்பு குழுக்கள் தயார் ! அமைச்சர் முக்கிய தகவல்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக மேலும் 10 தேசிய பேரிடர் அணிகளை கேட்க உள்ளோம். 5 அணிகள் சென்னைக்கும் , 5 அணிகள் விழுப்புரத்திற்கு கூடுதலாக கேட்க இருக்கிறோம்

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆலோசனை
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவரச கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். நேற்று , மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று அமைச்சர் ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை புதுக்கோட்டை மற்றும் கடலூர் ,விழுப்புரம் , ராமநாதபுரம் , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலமாக அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் அந்தெந்த மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,தயார் நிலையில் உள்ள மீட்பு படைகள்,முகாம் இல்லங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் போர்க்கால அடிப்படையில் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள பொது மக்களுக்கு தயார் நிலையில் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்படும் இடங்களில் உடனடியாக மீட்பு படை சென்று உதவும் வகையில் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முகாம் அலுவலகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல்ளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேசியதாவது ;
டிட்வா புயல் பாதிப்பு குறித்தும் மழை குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனைகளை மேற்கொண்டோம். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், விழுப்பும் மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
நாகையில் இரண்டு இடங்களில் அதிக மழை பெய்து உள்ளது. இந்த புயலானது
ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு புயல் வரும் என சொல்லி உள்ளார்கள். சென்னைக்கு முழுமையாக வராமல் , சென்னைக்கு ஓரமாகவே இந்த புயல் செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களில் தான் அதிக பாதிப்புகளை எற்படுத்தும் அங்கும் தொடர்ந்து அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மழை பெய்து வரும் மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் குறுஞ் செய்தி மூலம் எச்சரிக்கை
நேற்று வரை 1 கோடியே 24 லட்சம் பேருக்கு டிட்வா புயல் குறித்து குறுச்செய்திகள் அனுப்பபட்டுள்ளது. புயல்களை எப்படி எதிர்க் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் குறுஞ் செய்தி மூலமாக எச்சரிக்கை அனுப்பி உள்ளோம்.
மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் என்பது 28 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 10 அணிகளை விமான குழுக்களாக கேட்டு உள்ளோம். தேவை என்றால் முதல்வர் அவர்களை அழைப்பார். தற்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த டிட்வா புயலால் பெரிய அளவில் பாதிப்போ உயிரிழப்புகளோ எதுவும் இல்லை. 16 கால்நடைகள் இறந்துள்ளது. 24 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. தற்போது வரை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்
5 தேசிய மீ்ட்பு குழுக்கள் சென்னைக்கும் 5 தேசிய மீட்பு குழுக்கள் விழுப்புரம் கூடுதலாக கேட்க உள்ளோம். மக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம். டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் நேரடியாக அனைத்தையும் கண்காணித்து வருகிறார். டிட்வா புயலால் ஏற்படும் பாதிப்பு குறித்து இதுவரை 1264 புகார்கள் வந்துள்ளது. அதில் 1200 புகார்கள் சரி செய்துள்ளோம்.
இந்த புயலால் எந்த மாவட்டத்திலும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதனை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். எந்த துறை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என கண்டறிந்து அந்த துறை சார்ந்த அதிகாரிகள் கூடுதலாக அந்தெந்த மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ளோம் என தெரிவித்தார்.






















