காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு..சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிர கண்காணிப்பு .. ! உஷார் மக்களே
காஞ்சிபுரத்தில் மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு
மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பருவகால மழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரிலிருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியிலும் இந்த பிரச்சனை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதாவது, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 3 பேரும், திருவண்ணாமலையில் 5 பேரும், கடலூரில் 6 பேரும், திருவாரூரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக, புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் இரண்டு பெண்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு
இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் காய்ச்சலால் நிறைய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதேபோன்று டெங்கு காய்ச்சலாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அறிகுறிகள்
டெங்கு நோய்த்தெற்றின் முதன்மை அறிகுறிகளில் காய்ச்சல் ஒன்றாகும். இது பொதுவாக திடீரென தோன்றும் மற்றும் பல நாட்களுக்கு நீடிக்கலாம். அதிக காய்ச்சலுடன், கடுமையான தலைவலி, மூட்டு மற்றும் தசை வலி, சோர்வு, கண்ணுக்கு பின்புறம் வலி ஆகியவற்றை அனுபவிக்கலாம். பொதுவாக டெங்கு தொடங்கிய இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் தோல் வெடிப்பு ஏற்படலாம். மேலும், குமட்டல், வாந்தி மயக்கம், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
தடுப்பது எப்படி?
டெங்கு நோய் தேங்கி இருக்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களில் இருந்தே பரவுகிறது. அதனால் முடிந்து அளவு கொசுக்கள் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுடன், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே டெங்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துக் கொள்ளலாம். வீட்டை சுற்றியிருக்கும் குப்பைகள் மற்றும் வீணாகும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொசுக்கள் எளிதில் கடிக்கும் இடங்களான கை மற்றும் கால்களில் கொசு ரிப்பள்ளணட் மருந்துகளை தடவலாம். ஆனால் அதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ரிப்பள்ளண்ட் மருந்துகளை உபயோகிக்கும் முன் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். காய்ச்சலின்போது, ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நேரத்திலேயே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி ரத்த அணுக்களை அதிகரிக்கும் இயற்கையான நிலவேம்பு சூரணத்தை காய்ச்சி கசாயமாக அருந்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.