கூச்சல் போட்ட கல்லூரி மாணவர்கள்… பரபரப்பான சென்னை சென்ட்ரல்! பயணிகள் சிதறி ஓட்டம்… 100 பேர் மீது வழக்குப்பதிவு!
100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் 'பச்சையப்பன் கல்லூரிக்கு… ஜே' என கூறி மது பாட்டில்கள் மற்றும் கற்களை எடுத்து வந்து ரயில் நிலையத்தை தாக்கி அடாவடி செய்துள்ளனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பயணிகள் அலறி அடித்து ஓடிய நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'பச்சையப்பன் காலேஜுக்கு ஜே', என்று கூச்சலிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் சென்ட்ரலில் பரபரப்பு
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான புகழ்வாய்ந்த ரயில் நிலையம் ஆகும். வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்லும் அந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துவது உண்டு. சென்னையின் கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும், சண்டை ஏற்படுவதும் பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். கடந்த சில மாதங்களாக அவை குறைந்து வந்திருந்தாலும் திடீரென நேற்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பரபரப்பாக்கியுள்ளனர் கல்லூரி மாணவர்கள்.
பச்சையப்பன் கல்லூரிக்கு ‘ஜே’
ராயபேட்டையில் உள்ள நியூ காலேஜ்-ஐ சேர்ந்த மாணவர் ஒருவர் பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கி உள்ளார். அவர் வரும் வழியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிக்கு ‘ஜே’ எனக் கூறி கோஷம் இட்டு வந்துள்ளனர். மேலும் அவர்கள் பல்லவன் டெப்போவில் பேருந்தை நிறுத்தி நியூ கல்லூரி மாணவரை தாக்கி உள்ளனர்.
காவலரிடம் தஞ்சம்
அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய நியூ காலேஜ் மாணவர், சென்ட்ரல் ரயில் நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தன்னை காப்பாற்றுமாறு கூறி தஞ்சம் அடைந்துள்ளார். உடனடியாக அந்தக் காவலர் அந்த மாணவனை மீட்டு ரயில் நிலையத்திற்குள் அனுப்பி வைத்துள்ளார். அவர் உள்ளே சென்றதை அறிந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மேலும் பல மாணவர்களை அழைத்து அங்கு சென்றுள்ளனர்.
ரயில் நிலையத்தில் அடாவடி
100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் 'பச்சையப்பன் கல்லூரிக்கு… ஜே' என கூறி மது பாட்டில்கள் மற்றும் கற்களை எடுத்து வந்து ரயில் நிலையத்தை தாக்கி அடாவடி செய்துள்ளனர். ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் திடீரென கலவரம் ஏற்பட்டதை, சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். உடனடியாக ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கலவரம் செய்த மாணவர்களை விரட்ட, கூச்சல் போட்ட மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர், நந்தனம் கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 என மொத்தம் 14 மாணவர்களை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.