Thiruvanmiyur Bus Depot: இனி போட் தேவைப்படாது..! அப்கிரேட் ஆகும் திருவான்மியூர், ரூ.35.11 கோடியில் பலே திட்டம்..
Thiruvanmiyur Bus Depot: சென்னை திருவான்மியூரில் உள்ள பேருந்து நிலையம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதியதாக கட்டமைக்கப்பட உள்ளது.

Thiruvanmiyur Bus Depot: சென்னை திருவான்மியூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க, 34 கோடியே 11 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர் பேருந்து நிலையம்:
தென் சென்னை பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக திருவான்மியூர் பேருந்து நிலையம் உள்ளது. வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், மாமல்லபுரம் மற்றும் தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லவும் தேவையான பேருந்துகள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து பயணம் மேற்கொள்கின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேருந்து நிலையம், பயணிகளுக்கு ஏற்ற இடமாக உள்ளதா? என கேட்டால் இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் பதிலாக உள்ளது.
தவிக்கும் பொதுமக்கள்:
பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் என யாருக்குமே முறையான பராமரிப்பு இல்லாத பார்க்கிங், சிதைந்து, சீராக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசும் கழிவறைகள், குடிநீர் வசதி இல்லாதது, காத்திருப்பு இடங்கள் தூய்மையாக இல்லாதது, நெரிசலான பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மிகவும் பழமையான உட்கட்டமைப்பு என ஒட்டுமொத்த திருவான்மியூர் பேருந்து நிலையமே பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர்..!
பேருந்து நிலையத்தில் முறையான மழைநீர் வடிகால்களும் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதோடு, திருவான்மியூர் பேருந்து நிலையம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அதாவது அங்கு அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை விட 2 அடி பள்ளத்தில் உள்ளது. இதனால் சிறு மழை பெய்தாலே, அப்பேருந்து நிலையம் வெள்ளக்காடாகி விடுகிறது. பேருந்துகள் அனைத்தும் அவற்றில் மிதந்தபடியே வந்து செல்கின்றன. உள்ளே சிக்கிக்கொள்ளும் பயணிகள் பேருந்துகள் மூலமாகவே வெள்ள நீரை கடந்து வெளியே வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. படகு சேவையே தேவைப்படும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும், பேருந்து நிலையத்தை தரம் உயர்த்தி கட்ட வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.
புதிய பேருந்து நிலையம் - ரூ.35.11 கோடி நிதி
திருவான்மியூர் மக்களின் போக்குவரத்து பிரச்னைகள் அனைத்தும் இன்னும் சரியாக 12 மாதங்களில் தீர்ந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. நவீனமயமாக்கல், விரிவுபடுத்தப்பட்ட பேருந்து சேவைகள், வழித்தடங்களுக்கு இடையே தடையற்ற பயணம் மற்றும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவது என, தற்போதைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் ரூ.35.11 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
புதிய பேருந்து நிலையம் நெரிசலைக் குறைப்பது மட்டுமல்லாமல், கூடுதல் சேவைகளுடன் நகர பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய முறையான பாதசாரிகளுக்கான பாதைகளும் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.95 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம்
தென் சென்னையை நகர மையத்துடன் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் புள்ளியாக, ECR-ஐ சார்ந்து இந்த பேருந்து முனையம் மற்றும் பேருந்து நிலையமானது அமைந்துள்ளது. 2.95 ஏக்கர் பரப்பளவில் அதிக விலை மதிப்புகொண்ட ரியல் எஸ்டேட்ட பகுதியில் இந்த முனையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் ஒரு கிரவுண்ட் (0.055 ஏக்கர்) நிலமானது சுமார் 4 கோடி ரூபாய்க்கு விலை போவது குறிப்பிடத்தக்கது. எனவே பேருந்து நிலையத்தின் மறுவடிவமைப்பு என்பது பொதுப் போக்குவரத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, வணிகத் திறனைத் மேம்படுத்துவதற்கும் முக்கியமானது.
அதிகரிக்கும் பேருந்து சேவைகள்:
திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து மொத்தமாக 104 பேருந்துகள் இயக்கப்பட, பீக் ஹவர்ஸில் 88 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாலொன்றிற்கு 1,776 சுழற்சிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்து நிலையம் விரிவாக்கப்பட்டால் குறைந்தது 20 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக தூய்மையான உணவு உண்ணும் இடங்கள், கழிவறைகள், குடிநீர் நிலையம், பேருந்துகளுக்கான நேர அறிவிப்பு பலகை, வணிக வளாகங்கள், மழைநீர் தேங்குவதை தடுக்க பேருந்து நிலையத்தின் உயரத்தை உயர்த்துவது போன்ற பணிகளும் இந்த திட்டத்தில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் கோரிக்கை:
ECR, OMR மற்றும் நகருக்குள் செல்லும் பயணிகளுக்கு இந்த பேருந்து நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, இதற்கான திட்டத்தை மிகவும் கவனத்துடன் கையாள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்புள்ளதால், பேருந்து நிலையதில் வாகனங்களின் இயக்கத்திற்கு தேவையான இட வசதி உறுதி செய்யப்பட வேண்டும். பேருந்து நிலையத்திற்கான அணுகல், முதல் மற்றும் கடைசி பகுதிக்கான இணைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





















