Chembarambakkam Lake: ரெட் அலர்ட் எதிரொலி; செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் திறப்பு - நிலவரம் என்ன ?
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
செம்பரம்பாக்கம் ஏரி (chembarambakkam lake )
சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில் பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிகளில் இருந்து மழை காரணமாக தண்ணீர் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது மழையைப் பொறுத்து மாறுதல் அடைந்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் (chembarambakkam lake level )
செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 20.74 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 2.792 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 2800 கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3000 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்து வருகின்றனர். நாளை சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 3000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது
Cyclone Michaung (மிக்ஜாம் புயல்)
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.