தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஊழியர்கள் எழுந்த நிற்காததற்கு வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி
தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜனவரி 26, குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது, சென்னை கிளை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மாநில நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ஆர்பிஐ மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று குடியரசு தினமன்று, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. சென்னை கிளை தேசிய ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது.
ஆனால் அதற்கு வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் இதுகுறித்து சிலர் கேட்டபோது எழுந்து நிற்க முடியாது என அவர்கள் கூறினார்கள். தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர், வங்கிகள் ஒரு சமூகத்திற்கு அவசியம். மேலும், ரிசர்வ் வங்கி, ஒரு வங்கி ஒழுங்குமுறை மற்றும் நாணயகொள்கை மேலாளர் ஆகியோரும் கூட. இந்த வீடியோ வருத்தமளிக்கிறது. மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்ற 2 நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு வங்கி அதிகாரிகள் செய்ய விரும்பும் வங்கிகளுக்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டினோம். இதுதொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆர்பிஐ அதிகாரிகளின் செயலுக்கு மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
#JUSTIN | குடியரசு தின விழாவில் தமிழ் தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி ஊழியர்கள் https://t.co/wupaoCzH82 #RepublicDay #Chennai #RBI pic.twitter.com/Uy8D5AJln2
— ABP Nadu (@abpnadu) January 26, 2022
மேலும் எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலர் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அவர் புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்