சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு காவல் ஆணையரின் புது உத்தரவு
சென்னையில் வாடகைக்கு வீடு அளிக்கும் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் குடியிருப்பவர்களின் விவரங்களை வரும் அக்டோபர் 26-ந் தேதிக்குள் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகிப்பவர் சங்கர் ஜிவால். இவர் இன்று சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் வாடகைதாரர்களின் பெயர்,ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்பமனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம் பற்றி ஏதும் காவல் துறைக்கு தெரிவிக்கத் தேவையில்லை.
வாடகைதாரர்கள் பற்றிய தகவல்கள் காவல்நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும். வெளிமாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை காவல் நிலையங்களில் கணினியில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை ஆணையர்கள் அலுவலகங்களிலும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப்பிரிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கணினியில் பதிவு செய்துவைப்பார்கள்.
வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இந்த தகவல்கள் அனைத்தையும் வீட்டு உரிமையாளர்கள் வரும் அக்டோபர் மாதம் 26-ந் தேதிக்குள் காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறும் திருட்டு, கொள்ளை உள்பட குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசும் நாட்டில் நடைபெறும் நூதன முறையிலான திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடைமுறைகளை கையாண்டு வருகிறது.
சென்னையில் வாடகை வீடுகளில் போலியான ஆவணங்கள் அளித்து தங்குபவர்கள், சந்தேகத்திற்கு வகையில் இருப்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்கள் உள்ளிட்டோரை பிடிப்பதற்கு இந்த தகவல்கள் காவல்துறைக்கு பயனளிக்கும் என்பதற்காகவும் காவல்துறையினர் இந்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் பொதுமக்கள் வசித்து வரும் சூழலில், கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, பாரிமுனை, அடையாறு, திருவல்லிக்கேணி என்று சென்னையின் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் வட மாநிலத்தவர்கள் பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனார் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : சென்னையில் பயங்கரம் : 5 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த கூல்டிரிங்ஸ் கடைக்காரர் கைது : இரு பெண்கள் கைது