Chennai Traffic: வாகன ஓட்டிகளே! சென்னையில் இனி இந்த வேகத்தில்தான் வண்டி ஓட்டனும் - என்ன ஸ்பீடு?
Chennai Speed Limit: சென்னையில் வரும் 4-ந் தேதி முதல் வாகனங்களை என்ன வேகத்தில் இயக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்போதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னையில் போக்குவரத்து என்பது பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், சென்னையில் வாகனங்கள் என்னென்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று சென்னை காவல்துறை புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
வாகனங்களுக்கு வேக வரம்பு:
இதன்படி, இரு சக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திலும் செல்ல வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேக வரம்பானது வரும் 4ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்கள் 60 கி.மீ. வேகத்திலும், கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னை எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெருநகரங்களில் ஒன்றாகும். தகவல் தொழில்நுட்பம், சினிமா, அரசியல், வர்த்தகம், அத்தியாவசிய பொருட்கள் வணிகம் என 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.
போக்குவரத்து நெருக்கடி, விபத்து:
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதத்தில் சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, சென்னை விமான நிலையம் – நந்தனம் – சென்ட்ரல்- விம்கோ நகர் வரையிலான வழித்தடத்திலும், சென்னை விமான நிலையம்- கோயம்பேடு – சென்ட்ரல் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், பல வழித்தடங்களில் சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இந்த சூழலில், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக சென்று வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் 30 கி.மீ.
இதைத்தடுக்கும் விதத்தில் தற்போது சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டை காவல்துறை விதித்துள்ளது. காவல்துறையினரின் இந்த அறிவிப்பின்படி, மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம், கனரக வாகனம் என அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வரும் 4-ந் தேதி சென்னையில் வாகனங்களின் வேகத்தை போக்குவரத்து காவல்துறையினர் உன்னிப்பாக கவனிக்க உள்ளனர். காவல்துறையின் இந்த அறிவிப்பின் காரணமாக, விபத்துகள் தவிர்க்கப்படும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: LEO Success Meet LIVE: லியோ படத்தின் வெற்றி விழா.. விஜய்யை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் மிஷ்கின்..!
மேலும் படிக்க: Vanathi Srinivasan: பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று.. தொண்டர்கள் அதிர்ச்சி..