Face Book ல் மனைவியின் போட்டோவை தவறாக சித்தரித்து பதிவிட்ட கணவர் - சென்னையில் அதிர்ச்சி
சென்னையில், முகநூலில் மனைவியின் புகைப்படத்தை தவறான கருத்துக்களுடன் பதிவிட்ட கணவர் கைது

பெண் பெயரில் போலி முகநூல் கணக்கு
சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண்மணி , V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் , தனக்கு திருமணமாகி முதல் கணவர் இறந்த நிலையில் , 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகவும் , இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் , முகமது பைசல் முகநூல் வலைதளத்தில் தனது பெயரில் கணக்கு தொடங்கி , தனது புகைப்படம் செல்போன் எண்ணை பதிவிட்டு, என்னை பற்றி தவறாக சித்திரித்தும் பதிவிட்டுள்ளதால், தனது செல்போன் எண்ணுக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும் , எனது புகைப்படைத்தையும் , என்னை பற்றி தவறாகவும் முகநூலில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
விசாரணையில் புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில் , போலீசார் BNS Act மற்றும் IT Act ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
V-6 கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், புகார் தாரரின் 2 - வது கணவரான முகமது பைசல் மேற்படி குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் பேரில் , காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு , இவ்வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பைசல், ( வயது 40 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி முகமது பைசல் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மனைவியை தவறாக பேசியதால், நண்பனை கத்தியால் தாக்கிய நபர்
சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா ( வயது 31 ) என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா கொளத்தூர் 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்துள்ளார்.
கடந்த வாரம் அமித்பாஷா அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமித்பாஷா நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு சென்று பேசிக்கொண்டிருந்த போது , ஷேக் அப்துல்லா, அமித் பாஷாவிடம் ஏன் எனது மனைவியை பற்றி தவறாக பேசினாய் என கேட்ட போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஷேக்அப்துல்லா , அமித்பாஷாவை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இரத்த காயமடைந்த அமித்பாஷாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அமித்பாஷா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அமித்பாஷாவின் தந்தை காசிம், வ/57, என்பவர் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , கொலை வழக்கில் தொடர்புடைய ஷேக் அப்துல்லா, ( வயது 31 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.




















