கணவருக்கு காதலர் தின பரிசு : ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் செங்கல்... வாடிக்கையாளர் அதிர்ச்சி...!
ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் செங்கல் இருந்ததை கண்டு, பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட காதலர்கள் தங்கள் இணைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்கள் கொடுத்து அசத்தினர். அதேசமயம் மகிழ்ச்சியாக காதலர் தினம் கொண்டாட நினைத்து சிலர் பிரச்னையில் சிக்கிய சம்பவமும் ஆங்காங்கே நடைபெற்றது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஆர்டர் செய்த பொருள்
சென்னை மாதவரம் வி.ஜி.கே நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி ஹேமா (25). இவர் ஒரு யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இவர் காதலர் தினத்தையொட்டி தனது கணவர் தங்கராஜனுக்கு பரிசளிப்பதற்காக flipkart-ல் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பிப்ரவரி 8ஆம் தேதி ஆர்டர் செய்த பொருள் நேற்று தான் டெலிவரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பொருளை டெலிவரி செய்த பெண் ஊழியர் ஹேமாவிடம் பார்சலை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டார்.
வந்தது செங்கல்
உடனடியாக ஆர்டர் செய்து பொருளை சரிபார்ப்பதற்காக ஹேமா பிரித்து பார்த்தார். அப்போது அதில் அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் செங்கல் துண்டுகள் இருந்தன. இதனை பார்த்து ஹேமா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெலிவரி செய்த பெண்ணிடம் விசாரணை செய்தார். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து, அலுவலகத்தில் வந்த உங்கள் பிரச்சனைகளை கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனை அடுத்து, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டார் ஹேமா. ஆனால் அங்கு முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இதனை தொடர்ந்து ஹேமா மற்றும் அவரது கணவர் தங்கராஜனும் சென்னை மாதவரம் கணபதி தோட்டத்தில் உள்ள டெலிவரி ஆலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த அலுவலர்களிடன் இந்த பிரச்சனை குறித்து தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
அப்போது, அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி, அலுவலகத்தில் வெளியேற்றம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஹேமா மற்றும் அவரது கணவர் தங்கராஜ் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனார். புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களும் பயனாளர்களின் தேவையை உணர்ந்து பண்டிகை காலம், விழாக் காலங்களில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. ஆன்லைன் வணிகத்தில் ஆர்டர் செய்ததற்கு மாறாக வேறொரு பொருட்கள் டெலிவரி செய்யப்படும் செய்திகளை சமீப காலமாகவே அதிகரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Vaathi Review: வாத்திக்கு விசில் போடலாமா? விளாசித் தள்ளலாமா? - ஃபர்ஸ்ட் கிளாஸ் ரிவ்யூ இதோ....!