Vaathi Review: வாத்திக்கு விசில் போடலாமா? விளாசித் தள்ளலாமா? - ஃபர்ஸ்ட் கிளாஸ் ரிவ்யூ இதோ....!
Vaathi Movie Review in Tamil: நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாத்தி படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
Venky Atluri
Actor dhanush, Actress Samyuktha menon, Samuthirakani, Bharathi Raja
Vaathi Review: தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா , சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வாத்தி”. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கதையின் கரு
1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.
இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்.
நடிப்பு எப்படி?
பாலமுருகனாக வரும் தனுஷ் படத்தை ஒன் மேன் ஆர்மியாக தாங்குகிறார். ஆரம்பத்தில் கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் அட்டகாசங்களை படம் தோலுரித்து காட்டப்போகிறது என நினைப்பவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது. எந்த ஒரு காட்சியும் அதிக அழுத்தம் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டதுபோல இருக்கிறது.
குழந்தை தொழிலாளர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பது, சாதிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஏற்கனவே பல படங்களில் காட்சிகள் வந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. வகுப்புகள் எடுக்காமல் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் , வியாபார நோக்கம் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் என இன்னும் எத்தனை காலத்துக்கு தான் சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்லப் போகிறார்கள்.
மீனாட்சியாக வரும் நாயகி சம்யுக்தா மேனனுக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை. ஆனாலும் வா வாத்தி பாடலில் ரசிக்க வைக்கிறார். அதேசமயம் படம் முழுக்க தெலுங்கு சினிமா மேக்கிங் ஸ்டைல் அப்படியே தெரிகிறது. அதனால் படம் பார்க்க செல்பவர்களால் கதையில் ஒன்ற முடியாமல் போகிறது. சமுத்திரகனியின் மிரட்டலான வில்லன் ஆக்டிங் இதில் மிஸ்ஸிங்.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க ஊரில் உள்ள தியேட்டரை பயன்படுத்துவது, விதவிதமான கெட்டப் போட்டு பாடம் நடத்துவது , பாரதியார் வேடம் போட்டு தனுஷ் சண்டை போடுவது, தங்கள் பிள்ளைகளின் கல்வியை கெடுக்க நினைக்கும் ஊர் மக்கள் உடனே திருந்துவது என லாஜிக்கே இல்லாத காட்சிகள் உள்ளது. ஒரே ஒரு காட்சியில் இயக்குநர் பாரதிராஜா தலைகாட்டுகிறார். கென் கருணாஸ் எதற்கு வருகிறார் என்றே தெரியவில்லை.
இசை எப்படி?
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வா வாத்தி, நாடோடி மன்னன் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்துடன் ஒன்றவில்லை. பின்னணி இசையில் சில இடங்களில் நன்றாக வந்துள்ளது. கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் சொதப்பி, இயக்குனர் வெங்கி அட்லூரி ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளார்.
படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சு தரும், படிப்புங்கிறது பிரசாதம் மாதிரி கொடுங்க.. அதை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க , கல்வியில கிடைக்கிற காசு அரசியல்ல கிடைக்காது என ஆங்காங்கே வரும் வசனங்கள் கைதட்ட வைக்கிறது.
மொத்தத்தில் “வாத்தி” படம் ஒரு தெலுங்கு பேசும் தமிழ் திரைப்படம்...!