முடிவடைந்த கார்த்திகை மாதம்... காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்.. விலையும் குறைவுதானாம்!
கார்த்திகை மாதம் முடிவடைந்த நிலையில் சென்னை காசிமேட்டில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் பொய்த்ததால் மழை அளவு குறைந்தது. அதேபோல், கார்த்திகை மாதம் முடிவடைந்த நிலையில் பெரும்பாலான மக்கள் மிகப்பெரிய மீன் நேரடி விற்பனை செய்யப்படும் இடமான காசிமேடு துறைமுகத்திற்கு படையெடுத்து செல்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் வியாபாரம் குறைந்ததால் மீனவர்கள் கவலை கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில், கார்த்திகை மாதம் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை குறைந்த விலையில் வாங்க இன்று அதிகாலை முதலே மீன் பிரியர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் குவிந்து வருகின்றனர். இதனால், நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று அதிகளவில் மீன் பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் விலை சற்று குறைவாகவே உள்ளதாக மீன் வாங்க சென்ற மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, பெரிய வகை மீன்களான வஞ்சிரம், பாறை, வவ்வால், ஷீலா, சுறா வகைகள், மீனை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர்.
சென்னை மீன் விலை நிலவரம்:
- வஞ்சரம் - 650
- வவ்வால் - 500
- கொடுவா, சங்கரா, கடம்ப, இறால், நண்டு - 400
தூத்துக்குடியில் மீன் நிலவரம் என்ன?
தூத்துக்குடி திரேஸ் புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுமூலம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இன்று கரை திரும்பிய மீனவர்கள் ஏலக் கூடத்திற்கு சீலா , விளைமீன் , உளி, பாறை, முரல் உள்ளிட்ட ஏராளமான மீன்கள் விற்பனைக்காக குவித்தனர்.
ஆனால், வழக்கமாக கூடை 1800 முதல் 2000 வரை விற்கப்படும் முன்டகன்னி பாறைமற்றும் முரல் மீன்களின் விலை கிலோ கூடை 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சீலா மீன் கிலோ500 ரூபாயாகவும், விளை மீன் மற்றும் உளி மீன்கள் கிலோ 250 வரை விற்பனை செய்யப்படுகின்றன இதனால் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தும் விலை இல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையடைந்து வருகின்றனர்.