”நடவடிக்கை எடுங்கள்..இல்லையெனில் சத்யாகிரகம்..” ராஜினாமா செய்த ஐஐடி பேராசிரியர் பிரதமருக்கு கடிதம்..
சாதிய பாகுபாடு விவகார விசாரணையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கடந்தாண்டு ராஜினாமா செய்த பேராசிரியர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக அங்கு பணியாற்றிய பேராசிரியர் விபின் பாட்டீல் கடந்தாண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
“ நான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் எனப்படும் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்தவன். சென்னை ஐ.ஐ.டி.யில் நான் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்களால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபாட்டிற்கும், தொல்லைகளுக்கும் ஆளாகினேன். இதுதொடர்பாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்திருந்தேன்.
இதையடுத்து, என்.சி.பி.சி. ஐ.ஐ.டி. மெட்ராசில் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை கடந்தாண்டு அக்டோபரில் முடிவடைந்ததில் இருந்து சென்னை ஐ.ஐ.டி.யின் அப்போதைய இயக்குனரும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவரும் என்னை இடைவிடாமல் துன்புறுத்தினர்.
எனது வழக்கை என்.சி.பி.சி. அதன் சொந்த அலுவலகம் மூலமாக விசாரிக்க வேண்டும் என்று நான் விரும்புவதால் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். சென்னை ஐ.ஐ.டி.யில் எஸ்.சி./எஸ்.டி./ஓ.பி.சி. ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆள்சேர்ப்பு இயக்கத்தின் மோசடிகளும் இந்திய அரசாங்கத்தால் விசாரிக்கப்பட வேண்டும்.
எங்கள் குடியரசின் மக்களின் மனசாட்சியை அழைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாக அலுவலகத்தின் முன்பு நிராகரா சத்யாகிரகா போராட்டத்தை வரும் பிப்ரவரி 24-ந் தேதி தொடங்குவேன். இந்த மண்ணில் இருந்து சாதிப்பாகுபாடு என்ற கொடுமையை அகற்ற நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
கோரிக்கைகள் :
- துறைத்தலைவர் ஜோதிர்மயா திரிபாதி என்.சி.பி.சி. தனது விசாரணையை முடிக்கும் வரை பதவி விலக வேண்டும்.
- சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகக்குழுவில் இருந்து முரளிதரன் விசாரணை முடியும் வரை பதவி விலக வேண்டும்.
- இவர்கள் இருவரும் என்னிடமும், பிற பிராமணரல்லாத ஆசிரியர்களிடமும் நடந்து கொண்ட விதத்தை பற்றி விசாரணை செய்த பிறகே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
- தற்போது நடைபெற்று வரும் எஸ்.சி./எஸ்.டி./ ஓ.பி.சி. பிரிவு ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு பணியில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு சிறப்புக்குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்