திருநங்கைகளுக்கு காரில் லிஃப்ட் கொடுத்த வாலிபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கார் ஓட்டுநரை மிரட்டி வெள்ளிச் செயின்களை பறித்துச் சென்ற 3 திருநங்கைகள்.

லிப்ட் கொடுத்த வாலிபர்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பரத் ராஜ்குமார் ( வயது 25 ) என்பவர் , சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் காரில் அரும்பாக்கம் , MMDA காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது , அங்கு நின்று கொண்டிருந்த 3 திருநங்கைகள் லிப்ட் கேட்டு காரில் ஏறி விருகம்பாக்கம் , சொர்ணாம்பிகை தெருவில் இறங்கிய போது , 3 திருநங்கைகளும் சேர்ந்து கார் ஓட்டுநர் பரத் ராஜ்குமாரை அவதூறாக பேசி கையால் தாக்கி அவரிடமிருந்து சுமார் 40 கிராம் எடையுள்ள 1 வெள்ளிச் கைச்செயின் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 1 செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
வெள்ளி செயின்கள் பறிமுதல்
பரத்ராஜ் குமார், இதுகுறித்து R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் , போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட திருநங்கைகள் 1.அசோக் நகர் பகுதியை சேர்ந்த அகல்யா ( வயது 23 ) 2. கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சனா ( வயது 28 ) 3.வடபழனி பகுதியை சேர்ந்த பிரியா ( வயது 33 ) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 கிராம் எடையுள்ள 2 வெள்ளிச் செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
1200 சதுரடி நிலத்தை , போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த நபர்
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு, 6 - வது தெருவில் வசித்து வரும் சுவாமி நாதன் ( வயது 45 ) என்பவர் கொளத்தூர், கண்ணதாசன் நகர் பகுதியில் 1200 சதுரடி நிலத்தை பாபு என்பவரிடம் கடந்த 2018 ம் ஆண்டு ரூ.55 லட்சத்திற்கு கிரையத்திற்கு வாங்கி அவரது மனைவி கவிதா பெயரில் கிரையம் செய்து உள்ளார். நிலத்திற்கு சுவாமி நாதன் பட்டா வாங்க முயன்ற போது , அந்த இடத்திற்கு சர்வே எண் உட்பிரிவு செய்ததில் பிழை ஏற்பட்டதை மறைத்து பாபு மனுதாரரை ஏமாற்றி கிரையம் செய்து கொடுத்தது தெரிய வந்தது.
போலி ஆவணம் ரூ. 55 லட்சம் மோசடி
சுவாமி நாதன் இது குறித்து கடந்த 2020 ம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு , EDF-1ல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணையில் பாபு ( வயது 62 ) என்பவர் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ரூ.55 லட்சம் மோசடி செய்தது உண்மையென தெரிய வந்தது.
மேற்கண்ட வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண் அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் , EDF-1 உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் பாபு (வயது 62 ) என்பவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பாபு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















