காவல் குடும்பத்தினருடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய சென்னை காவல் ஆணையர் !!
சென்னை காவல் ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு , தனிப் பிரிவுகள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அருண் பங்கேற்று சிறப்பித்தார்

சமத்துவ பொங்கல் விழா
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப் பிரிவுகள் சார்பில் நடைபெற்ற காவல் துறையினருக்கான சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, விழாவினை துவக்கி வைத்து பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
போட்டிகளை துவக்கி வைத்த காவல் ஆணையர் அருண்
பொங்கல் விழாவையொட்டி, காவல் குடும்பத்தினர் வரைந்திருந்த கோலப் போட்டிக்கான கோலங்களை பார்வையிட்டு, கிராமிய பண்பாட்டினை பரைசாற்றும் விதமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த வயல்வெளி, நாற்று நடுதல், நெற்களஞ்சியம் உள்ளிட்ட கிராம கலைகளை பார்வையிட்டும், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினருக்கான கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து காவல் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் பரத நாட்டியம், கிராமிய, பொங்கல் நடனங்கள் மற்றும் சிலம்பாட்டம், மல்லர் கம்பம் ஆகிய சாகசங்களை காவல் குடும்பத்தினருடன் கண்டு ரசித்து பாராட்டினார்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றி, அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் ஜோஷி நிர்மல் குமார் , இணை ஆணையாளர் மகேஷ்வரன், துணை ஆணையாளர்கள் மருத்துவர் ஸ்ரீநாதா , ராமமூர்த்தி , சீனிவாசன் , ஜெயகரன் , அன்வர் பாஷா , காவல் அதிகாரிகள், ஆளி மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்





















