Chennai Book Fair: தொடங்கியது 46-வது சென்னை புத்தகக் காட்சி - பொற்கிழி விருதுகளை வழங்கி கவுரவித்த முதலமைச்சர்
46ஆவது சென்னை புத்தகக் காட்சி-2023"யை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
46ஆவது சென்னை புத்தகக் காட்சி-2023"யை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023 மற்றும் பபாசி விருதுகளை வழங்குகினார்.
புத்தக காட்சி:
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் புத்தக காட்சியை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்த ஆண்டு புத்தக காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தக காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும், காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது,
தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தமிழாட்சி என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதற்குச் சான்றுகளாகத்தான் இந்த நிகழ்ச்சியும் அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தமிழாட்சி என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதற்குச் சான்றுகளாகத்தான் இந்த நிகழ்ச்சியும் அமைந்திருக்கிறது.
ஒருகாலத்தில் சென்னையில் மட்டுமே புத்தக கண்காட்சி நடந்து வந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. புத்தக வாசிப்பில் ஆர்வம் இருக்கக்கூடிய ஆட்சித் தலைவர்கள், அந்த ஆட்சியர்கள் அவரவர் மாவட்டத்திலே அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அந்த புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு நம்முடைய அரசு ஆணையிட்டது. அதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடும் செய்திருக்கிறோம். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. பத்து நாட்கள், இரண்டு வாரங்கள் என நடக்கும் இந்த புத்தகச் சந்தைகள் மூலமாகப் புத்தக விற்பனை மட்டுமல்ல - சிறப்பான சொற்பொழிவாளர்களைக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலமாக மாவட்டந்தோறும் இலக்கிய எழுச்சி - அறிவு மலர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
வழக்கமாக, சென்னைப் புத்தகக் காட்சிக்காக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று நோய் வந்த காரணத்தால், பதிப்பாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலை மனதில் கொண்டு பபாசி அமைப்பினர் கூடுதல் நிதியை அரசிடம் கேட்டார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக அதை ஏற்று 50 லட்சம் ரூபாயை அன்றைக்கு அரசின் சார்பில் நாம் வழங்கினோம். இந்தத் தொகை சங்க உறுப்பினர்களாக இருக்கும் 277 பேருக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும் - உறுப்பினர் அல்லாத 113 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். பதிப்பகங்களுக்கு உதவிகள் செய்வதும், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவதும் நாட்டில் அறிவொளி பரவ வேண்டும் என்பதற்காகத்தான்.
'வீட்டுக்கு ஒரு நூல் நிலையம் அமைய வேண்டும்' என்று ஆசைப்பட்டவர் நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய நோக்கத்தை உருவாக்கவே, மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகளையும், இலக்கிய விழாக்களையும் நடத்துவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.
தமிழின் மீதும் புத்தகங்களின் மீதும், எழுத்தின் மீதும், எழுத்தாளர்கள் மீதும் மாறாக் காதல் கொண்டவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இதுபோன்ற கண்காட்சியின் தொடக்க விழாவுக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு அன்றைக்கு நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நம்முடைய கலைஞர் அவர்கள் உரையாற்றினார்கள், சிறப்பித்தார்கள். ஒரு கோடி ரூபாயை வழங்கி, எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் பொற்கிழி விருது வழங்கி உற்சாகப்படுத்தச் சொன்னார்கள்.
கலைஞரின்ன் பெயரால் அமைந்திட்ட அந்த விருதினை பெற்றிருக்கக்கூடிய
* மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன்
* கவிஞர் தேவதேவன்
* மொழிபெயர்ப்பாளர் சி.மோகன்
* நாடகக் கலைஞர் பிரளயன்
* நாவலாசிரியர் தேவிபாரதி
* சிறுகதையாசிரியர் சந்திரா தங்கராஜ்
ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன், அவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமல்ல, தமிழரையும் - தமிழ்ப் படைப்பாளிகளையும் உயிரென நேசித்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருடைய மகனாகவும் நான் அவர்களை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.
சிறந்த எழுத்தைப் போலவே சிறந்த எழுத்தைப் பாராட்டுவதும் முக்கியமானது என்று அந்த நோக்கத்தோடுதான் ஒரு கோடி ரூபாய் நிதியை கலைஞர் அன்றைக்கு வழங்கினார். அந்த நிதி, அவருக்குப் பின்னாலும் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தப் பயன்பட்டு வருகிறது.
மதுரையில் கலைஞர் பெயரால் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு - அது பிரமாண்டமாக எழுந்து வருகிறது. விரைவில் அது திறக்கப்படவிருக்கிறது என்ற அந்த மகிழ்ச்சியான செய்தியை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகங்களோடு போட்டி போடக்கூடிய அளவுக்கு தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வெளியிட்டு வருகிறது என்பதை நான் இந்த நிகழ்ச்சியில் கம்பீரமாக நின்று சொல்ல விரும்புகிறேன்.
* திசைதோறும் திராவிடம் திட்டத்தின்கீழ் 25 நூல்களும்-
* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின்கீழ் 46 நூல்களும்-
* இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின்கீழ் 59 நூல்களும் -
* சங்க இலக்கிய வரிசையில் பத்துப்பாட்டு நூல்களும் -
* முன்பு வெளியான கலைக்களஞ்சியத்தின் ஆவணப்பதிப்பும் -
* நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகளாக 2 நூல்களும் -
* வ.உ.சி.யின் நூல் திரட்டுகளாக இரண்டு நூல்களும்-
* நாட்டுடைமை ஆக்கப்பட்டவர் வரிசையில் 17 நூல்களும்
என 173 நூல்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசின் சார்பில் வெளியிட்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதனால்தான் போட்டி போடக்கூடிய அளவுக்கு அரசும் புத்தக வெளியீடுகளில் இறங்கி இருக்கிறது என்று நான் பெருமையோடு சொன்னேன்.
நிரந்தரமாக புத்தகப் பூங்கா அமைக்க சென்னையில் இடம் வழங்கப்படும் என்று முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அறிவிப்பு செய்தார். 'அதனை நினைவூட்டி நானும் கடந்த ஆண்டு அந்த வாக்குறுதியை நினைவுபடுத்தி இருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும், அது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்பதை மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்குமாக எத்தனையோ சிறப்பான செயல்களை தமிழ்நாடு அரசு செய்து வருவதை எழுத்தாளர்கள், அறிஞர்கள், இலக்கிய இதழ்கள், சிறுபத்திரிக்கைகள், பொதுவெளியில் பாராட்டுகிறார்களா என்று எனக்குத் தெரியாது. யாரும் பாராட்டுவார்கள் என்பதற்காகவும் இத்தகைய செயல்களை நாங்கள் செய்யவில்லை.
கடந்த ஓராண்டுகாலத்தில் தமிழுக்கும், எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அத்தகைய அளவில்லாத ஆக்கப்பணிகளைத் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை யாராலும் மறந்துவிடவும், மறுக்கவும் முடியாது. எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல, காக்கின்றன.
இதுபோன்ற புத்தகச் சந்தைகளும் இலக்கிய விழாக்களும் எழுத்தையும், இலக்கியத்தையும் இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டுவதற்காகப் பயன்பட வேண்டும்.
"மொழியைக் காப்பதற்கான கடமை"
மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளமே போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை நாம் இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியைக் காப்பதற்கான கடமை என்பது எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்களைப் போலவே எழுத்தாளர்களுக்கும் இருந்தாக வேண்டும். தங்களது எழுத்தை மொழிகாப்பதற்கான மக்கள் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் அவர்களை எல்லாம் அன்போடு கேட்டு கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.