விமான விபத்தால் அஞ்சி நடுங்கும் பயணிகள்.. சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து!
அகமதாபாத் விமான விபத்தால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இன்று 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் விமான விபத்தால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ள நிலையில், விமானங்களில் பயணிக்க அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது.
விமான விபத்தால் அஞ்சி நடுங்கும் பயணிகள்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்து உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர்.
எதிர்காலத்தில் இம்மாதிரியான விமான விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் விரிவான நெறிமுறைகளை தயார் செய்ய உள்துறை செயலாளர் தலைமையில் மத்திய அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், விமான விபத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 விமானங்கள் ரத்து:
இந்த நிலையில், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணிக்கு, சென்னையில் இருந்து கோழிக்கோடு வரை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், இரவு 8.35 மணிக்கு, சென்னையில் இருந்து கொச்சி வரை செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் இருந்து ஷிமோகா வரை செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கோழிக்கோட்டில் இருந்து சென்னை வரவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், அந்தமானில் இருந்து சென்னை வரவிருந்த ஆகாச ஏர் விமானம், மற்றும் ஷிமோகாவில் இருந்து சென்னை வரவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நடைமுறை காரணங்களாலும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்களில் கூறப்படுகிறது. விமானத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இம்மாதிரியாக விமானங்கள் ரத்து செய்யப்படுவது பல முறை நிகழ்ந்திருந்தாலும், அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் கடந்த 2 நாள்களில் வழக்கத்திற்கு மாறாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதை தவிர, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.





















