தீரும் தலைவலி.. செங்கல்பட்டுக்கு கிடைத்த 3 சுரங்கப் பாதைகள்.. எங்கெங்க தெரியுமா?
"செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் மதுராந்தகம், படாளம், புக்கக்துறை ஆகிய மூன்று இடங்களில் சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது"

Chennai Trichy Highway Road: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தென் மாவட்டத்திற்கு செல்வதற்கும் தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வருவதற்கும் பிரதான சாலையாக உள்ளது. ஜி.எஸ்.டி சாலை செங்கல்பட்டு மாவட்டம் வழியாக செல்கிறது. பல இடங்களில் நடை மேம்பாலங்கள் அல்லது சுரங்கப் பாதைகள் இல்லாததால் உள்ளூர் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
நீண்ட நாள் காத்திருப்பு
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக, நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நடை மேம்பாலம் முறையாக பராமரிப்பு இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சூழல் இல்லாமல் இருந்து வருகிறது. சிதளம் அடைந்து, பாழடைந்து காணப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக மதுராந்தகம் மக்கள் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர்.
நடை மேம்பாலம் சரி இல்லாததால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. அவ்வப்போது ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்பும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளிநாடுகளிடம் கடன் வாங்கிய டாப் 10 நாடுகள்.! இந்தியா, பாகிஸ்தான் எந்த இடத்தில் உள்ளன?
சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை
இந்தப் பகுதியில் விபத்து நடைபெறுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை-மேச்சேரி இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.
மூன்று இடங்களில் சுரங்கப்பாதை:
இதேபோன்று புக்கத்துறை கூட்ரோடு பகுதியிலும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தனர். குறிப்பாக புக்கத்துறை கூட்ரோடு-உத்திரமேரூர் சாலையை கடக்கும்போது விபத்துக்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று படாளம்-வையாவூர் ஆகிய பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்தது.
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது. மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை-மேச்சேரி வரை சுமார் 22 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆரம்ப கட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இதேபோன்று தலா 22 கோடி மதிப்பீட்டில், புக்கத்துறை -உத்திரமேரூர் சுரங்கப்பாதை, படாளம் -வையாவூர் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளும் துவங்கி நடைபெற்று வருகிறது.
பணிகள் முடிவடைவது எப்போது?
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





















