மாநகராட்சி மயானத்தில் வீடு போன்று கட்டப்பட்டுள்ள கல்லறை : பொதுமக்கள் குற்றச்சாட்டு..!
சென்னை, ராயபுரத்தில் உள்ள மூலக்கொத்தளம் மாநகராட்சி மயானத்தில் விதிகளை மீறி வீடு போன்ற தோற்றத்தில் கல்லறை கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று ராயபுரம். இந்த பகுதியில் உள்ள மூலக்கொத்தளத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இறந்தவர்களை புதைக்கும் வகையில் மயானம் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த மயானத்தை தற்போது சென்னை மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த மயானத்தில் ராயபுரம், கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மயானத்தில் புதைக்கப்படும் சடலங்களுக்கு அவர்களது உறவினர்கள் கல்லறை கட்ட விருப்பம் தெரிவித்து வந்ததால், ஆறடி நீளம், மூன்றடி அகலம் அளவில் கல்லறை அமைப்பதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதற்காக, மாநகராட்சி சார்பில் ரூபாய் 9 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியில் இறந்த பெண்ணின் உடல் இந்த மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கல்லறை அமைக்க விரும்பிய அவரது உறவினர்கள், மாநகராட்சியின் விதியை மீறி கல்லறை கட்டி அதைச் சுற்றி ஒரு அறையை உருவாக்கியுள்ளனர். அந்த அறை சுமார் 10 அடி நீளமும், 8 அடி அகலத்தில் உள்ளது. மூலக்கொத்தளம் மயானத்தில் அனைவரும் மாநகராட்சியின் விதிகளின்படி கல்லறை கட்டியுள்ள நிலையில், இந்த கல்லறை மட்டும் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த மயானம் உள்ளதால், பல சமயங்களில் புதைப்பதற்கு இடம் இல்லாத நிலை ஏற்படும்போது, ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அங்குள்ள எலும்புகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், ஒரு கல்லறைக்காக மட்டும் இவ்வளவு இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டே இந்த கல்லறையை கட்ட அனுமதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், விதிகளை மீறி கல்லறையைச் சுற்றி கட்டப்பட்டுள்ள அந்த அறையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க : காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே 15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அரியவகை சூல கற்கள் கண்டுபிடிப்பு..!