மேலும் அறிய
Advertisement
7.5% இட ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்த வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மத்திய - மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக உயர்த்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை, 30 சதவீதமாக உயர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அகில பாரதிய சத்திரிய மகாசபா சார்பில் அதன் தேசிய துணை தலைவர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் முன், 0.15 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 2,656 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதும், 500 மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற முடியாத நிலையில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற 2,656 மாணவர்களும் மாணவர் சேர்க்கையை பெறும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக அதிகரிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.
சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது.
இதுதொடர்பாக மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது.
இதையடுத்து, மாணவியை மீட்கக் கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவியை உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட்ட மாணவன், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டதாகவும், தற்போது அவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்திருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என சிறார் நீதி சட்டத்தில் கூறியுள்ள நிலையில் மாணவனை கைது செய்தது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனத் தெரிவித்து, நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் இ.வி.சந்துருவை நியமித்து, இதுசம்பந்தமான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்டு கருத்துக்களை, இரு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, இதுசம்பந்தமாக கருத்துக்களைப் பதில்மனுவாக தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறை செயலாளர், சுகாதார துறை செயலாளர், மகளிர் நலன் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
க்ரைம்
தொழில்நுட்பம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion