சென்னை பூந்தமல்லியில் வெள்ளம்: காரை விட்டு தப்பிய ஓட்டுநர்! உயிர் காக்க ஓடிய பரபரப்பு சம்பவம்!
Chennai Rain: "காலை முதலே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கன மழை பெய்து வருகிறது"

"சென்னை பூந்தமல்லியில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டதால், காரை பாதியிலேயே விட்டுவிட்டு தப்பி வந்த கார் ஓட்டுநர்"
டிட்வா புயல்
டிட்வா புயல் வலு குறைந்தாலும் சென்னையில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிகள் முடிவடைந்து மாணவர்கள் வீடுகள் திரும்பும் போது சிரமத்திற்குள்ளாகினர்.
இந்தநிலையில் சென்னையில் காலையில் இருந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூறுகையில், இன்று 01.12.2025 காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சராசரியாக 68.26 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 129.90 மி.மீட்டர் மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக உத்தண்டி பகுதியில் 4.80 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் மழை
சென்னை புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காலை முதலே பூந்தமல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வேலப்பன்சாவடி அருகே இருக்கக்கூடிய சர்வீஸ் சாலையில், காலை முதலே பெய்து வரும் கனமழை காரணமாக சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது.
மேலும் இந்த சர்வீஸ் சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரில் ஆபத்தை உணராமல் வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. மேலும் கார் ஓட்டுநர் கார் எடுக்க முயற்சித்தும் முடியாத காரணத்தினால் மெல்ல மெல்ல காரானது மழை நீரில் மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை விட்டு உயிர் பிழைக்கும் படி தப்பி ஓடிய சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து, தேங்கியிருக்கக் கூடிய மழை நீரில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பாக காவலர்கள், இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















