வங்கி அலுவலர் முதல் இயற்கை விவசாயி வரை.. அறிவுத்தோட்டத்தின் பின்னுள்ள கதை என்ன?
வங்கி மேலாளர் , விவசாய மேம்பாட்டு சிறப்பு அலுவுலர் உள்ளிட்ட உயரிய பொறுப்புகளை வகித்துவந்த செந்தமிழ் செல்வன், தனது வங்கியின் வாடிக்கையாளர்கள் வாங்கிய விவசாய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுவதை பார்த்து மன வேதனை அடைந்தார்.
36 வருடங்களுக்கு மேலாக வங்கித்துறையில் அனுபவம்பெற்று, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பல்வேறு பகுதியில் வங்கி அலுவலராக பணியாற்றி வந்தவர் K தமிழ்செல்வன் (65) . இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார் .
தான் வங்கியில் பணிசெய்யும்பொழுது , வங்கி மேலாளர் , விவசாய மேம்பாட்டு சிறப்பு அலுவுலர் உள்ளிட்ட பல உயரிய பொறுப்புகளை வகித்துவந்த செந்தமிழ் செல்வன், தனது வங்கியின் வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற விவசாய கடன்களை திருப்பி செலுத்தமுடியாமல் அவதிப்படுவதை பார்த்து மன வேதனை அடைந்தார். அதுவரை விவசாயத்தின் மீது அதிக நாட்டம் இல்லாமல் இருந்த செந்தமிழ் செல்வனுக்கு , விவசாயிகள் செயற்கை ரசாயனம் மற்றும் செயற்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதால்தான் மண்ணின் வளம் குன்றி மகசூல் பெறமுடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர் என்ற உண்மையை கண்டறிந்தார் .
இயற்கை விவசாயம் சார்ந்த புத்தகங்கள் , சமூக வலைதள வீடியோகள் போன்றவற்றை அதிகம் பார்த்துதான் கற்றுக்கொண்டதை தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு கற்பிக்கலாம் என்று செந்தமிழ் செல்வன் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர்களோ இயற்கை விவசாயத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது என்று அஞ்சி தொண்டர் செயற்கை உரங்களையே பயன்படுத்தி வந்தனர். அதன் பலனாக பல விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களிடம் சொற்ப விலைக்கு விற்று தங்கள் வங்கி கடன்களை திருப்பி செலுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில்தான் ஒரு முன்னோடியாக திகழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, தனக்கு ஓய்வுபெற மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், 2012-ஆம் ஆண்டில் தனது 36 வருட கடின உழைப்பால் வாங்கிய தனது சொந்த வீட்டை 40 லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து லத்தேரி அருகே உள்ள கல்லம்பட்டு என்ற கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார் .
செந்தமிழ் செல்வன் அந்த இடத்தை வாங்கும்பொழுது சில பட்டுப்போன தென்னை மற்றும் மாங்காய் மரங்கள் மட்டும் தான் இருந்தது. சாகும் தருவாயில் இருந்த அந்த மரங்களையும் , நிலத்தையும் இயற்கை விவசாயத்தின் மூலம் எப்படியும் உயிர்ப்பிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கிய செந்தமிழ் செல்வனுக்கு , நிலத்தில் பாசனவசதிக்காக போர் செட் போடுவதற்கும் புதியதாக மர கன்றுகள் வாங்குவதற்கும் பணம் பற்றாமல் இருந்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய செந்தமிழ் செல்வன் "நான் செய்துவந்த வங்கி அலுவலர் வேலையில் இருந்து ஜூன் மாதம் 2015-ஆம் ஆண்டோடு பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் பண பற்றாக்குறை காரணமாக டிசம்பர் மாதம் 2014-ஆம் ஆண்டிலே , விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டேன். இதில் இருந்து கிடைத்த பணத்தில், அடமானத்தில் இருந்த எனது வீட்டை மீட்டு விட்டு பாக்கி இருந்த பணத்தை , என் விவசாய நிலத்திற்கு போர் செட் அமைப்பது உள்ளிட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி கொண்டேன் .
எனது 10 வருட கடின உழைப்பின் பயனால் தற்பொழுது எனது தோட்டத்தில் , நூற்றுக்கும் மேற்பட்ட மாமரங்கள் , 110 தென்னை மரங்கள் , 50 ஆரஞ்சு மரங்கள் , 50 எலுமிச்சை மரங்கள் , வாழை தோப்பு உள்ளிட்டவை செழுமையாக வளர்ந்து நல்ல மகசூல் தருகிறது .
முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையை பயன்படுத்தி இந்த தோப்பை உருவாக்கியதின் பயனாய் தற்பொழுது ஆண்டு ஒன்றுக்கு 4 டன் மா கனிகளும் , 10 000 தென்னை மரக் காய்களும் விளைகின்றது . இதன் மூலம் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 3 .5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கின்றது. மேலும் எனது தோட்டத்தில் 10 சென்ட் நிலத்தில் வெண்டைக்காய் , கத்திரி தக்காளி , பச்சைமிளகாய் , பப்பாளிப்பழம் உள்ளிட்ட காய் கனி வகைகளும் பயிரிட்டுள்ளேன், எனது தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மூலிகைச்செடி வகைகளும் இருக்கின்றது . இதில் இருந்து வரும் மகசூலில் எனது தோட்டத்தின் இதர செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்கிறேன் .
எனது தோட்டத்திற்கு இயற்கை வேலியாக புங்கை மட்டும் வேப்பமரங்களை நட்டுள்ளதால் , இதில் இருந்து விழும் இலை சருகுகளை கொண்டு ரசாயனம் ஏதும் கலக்காமல் வேப்பெண்ணை, புண்ணாக்கு உள்ளிட்ட இயற்கை பொருட்களை இதனுடன் சேர்த்து உரமாகவும், பூச்சி விரட்டிகளாகவும் பயன்படுத்தி வருகின்றேன்.
எனது தோட்டத்திற்கு "அறிவு தோட்டம்" என்று பெயர் சூட்டியுள்ள நான் , மாதத்திற்கு ஒரு முறை , இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் உடையவர்களுக்கு , எனது தோட்டத்தில் கல்வி சுற்றுலாவும் . அதை தொடர்ந்து இயற்கை விவசாய வகுப்புகளும் மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படுகின்றது .
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உடைய பலர் குறிப்பாக , வேளாண்மை கல்லூரி மாணவர்கள் , பள்ளி மாணவர்கள் என பலர் மாதம் தோறும் நடக்கும் இயற்கை விவசாய வகுப்புகளில் கலந்துகொண்டு அவர்களது அனுபவங்களை நபர்கள் உறவினர்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்கின்றனர். இதனால் அறிவு தோட்டம் மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வெள்ளம் சூழ காட்சி அளிக்கும் .
சிக்கிம் மாநிலத்தில் தற்போது 80 சதவீத நிலங்கள் இயற்கை விவசாய முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட செந்தமிழ் செல்வன் , நமது நட்பு மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக தங்களது நிலங்களை இயற்கை விவசாய முறைக்கு மாற்றுவதற்கு முழு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார் .
"செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திய உணவு பொருட்களை உண்ணும்பொழுது கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்கள் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது . மேலும் தற்பொழுது அதிகரித்துவரும் குழந்தையின்மை மற்றும் மலட்டுத்தன்மை உள்ளிட்ட கோளாறுகளுக்கு முக்கிய காரணமே செயற்கை உரங்கள் பயன்படுத்தி விளைவித்த உணவு பொருட்களை உட்கொள்வதால்தான் " என்று குறிப்பிட்ட செந்தமிழ் செல்வன் , இந்திய அரசுக்கும் ,தமிழக அரசுக்கும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் , இயற்கை முறை விவசாயத்தை பின்பற்றும் விவசாயிகளுக்கு அரசு தகுந்த மானியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார் .