நேரில் வந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - அடுத்து நடக்கப்போவது என்ன ?
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில்வேலன் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செந்தில்வேலன் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில்வேலன் உட்பட ஐந்து பேர் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஆஜராகியுள்ளார்.
ரஹ்மானுக்கு இரண்டாவது முறை வந்த சோதனை
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார்.
அந்த வகையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த முறை மழையில் சிக்கிய ரசிகர்களுக்கு இம்முறை மழை பெய்தால் தற்காத்துக்கொள்ள ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் தான்.
கடுப்பான ரசிகர் கூட்டம்
ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே மதியம் 2 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சாலையின் இருபுறம் நின்று சரிசெய்தாலும் பல மணி நேரமாக வாகன நெரிசல் ஏற்பட்டது.
"அதிரடி உத்தரவிட்ட டிஜிபி "
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சங்கர் ஜிவால். இது தொடர்பான செய்தி குறிப்பில், ” சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூர் பகுதியில் 10.09.2023 அன்று மாலை நடைபெற்ற இசைக்கச்சேரியின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்திற்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இந்நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் காவல் துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்
இந்நிலையில் நிகழ்ச்சி நடத்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு செய்து நிகழ்ச்சி முன் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனத்தை விசாரிக்க அழைப்பு விடுத்த நிலையில், அவர்கள் ஆஜராகவில்லை.