Seeman: திட்டமிட்ட சதி.. அம்பேத்கர் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாதா?- சீமான் கேள்வி
எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பெயரையோ, புகழையோ எவராலும் மறைக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரைவிடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? என்றும் சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் அறிவிப்புத் தோன்றுகிறது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரைவிடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது.
சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும். அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் நடைபெறும்வரை, அண்ணல் அம்பேத்கர் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பெயரையோ, புகழையோ எவராலும் மறைக்க முடியாது.
ஆகவே, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஜோதிராமன் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களைத் தவிர, மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த உத்தரவை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Draupadi Murmu TN Visit: அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் முர்மு; என்ன காரணம்?